அயோத்தி தீர்ப்பு வர உள்ள நிலையில் நகைகளுக்கு பதிலாக ஆயுதங்களையும் வாங்கி  குவியுங்கள் என உத்தரப்பிரதேசம் மாநில பாஜக தலைவர் ஒருவர் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.  அயோத்தியில் சர்ச்சைக்குரிய  நிலத்திற்கான உரிமை கோரும் வழக்கு நீண்ட நெடிய விசாரணைகளுக்குப் பின்னர் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.  அந்த வழக்கு விசாரணையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.  அந்த தீர்ப்பு இன்னும் ஒரு சில  வாரங்களில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  இதனிடையே, தீர்ப்புக்கு முன்னர்  யாரும் இந்த வழக்கு  குறித்து பேசக்கூடாது அப்படி பேசினால் அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாயும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதையும் மீறி பாஜகவினர் தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக விமர்சனங்களை எழுப்பி வருகின்றனர்.  இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் தீபாவளிக்கு முன்னதாக தந்துரோஸ் என்ற பண்டிகையை மக்கள் கொண்டாடுவது வழக்கம் அப்போது மக்கள் நகை ஆபரணங்களை வாங்குவது வழக்கம்.  இந்நிலையில் உத்திரபிரதேசம் மாநிலம் டியோபந்த் நகர் பாஜக தலைவராக உள்ள  கஜராஜ் ரானா அப்பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர் அயோத்தி வழக்கில் ராமர் கோயில் அமைய வேண்டும் என்பதே நம் விருப்பம். இறுதித் தீர்ப்பும் அப்படியே வரவேண்டும் என்றே நாம் எதிர்பார்க்கிறோம் எனக்கூறி  நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் பேசினார். 

 

வரவிருக்கும் தீர்ப்பு எப்படி இருந்தாலும் அதை எதிர்கொள்ளும் வகையில் நாம் இருக்க வேண்டும், தந்துரோஸ் பண்டிகைக்கு நீங்கள் ஆபரணங்களை வாங்குவதைவிட இரும்பு ராடுகள்,  கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை வாங்கி குவியுங்கள் அது நமக்கு பாதுகாப்பாக இருக்கும் என வன்முறையை தூண்டும் வகையில் பேசியுள்ளார். அவரின் சர்ச்சை பேச்சுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் தன்னுடைய பேச்சை திரும்ப பெற வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர் ஆனால் தான் பேசிய கருத்தை திரும்பப் பெற முடியாது என அவர் திட்டவட்டமாக மறுத்து உள்ளதால் கொந்தளிப்பு அதிகரித்துள்ளது