Asianet News TamilAsianet News Tamil

உத்தரப் பிரதேசத்தில் 4-வது கட்ட தேர்தல் - 53 தொகுதிகளில் வாக்குபதிவு

utrapradesh election
Author
First Published Feb 22, 2017, 9:07 PM IST


உத்தரப்பிரதேசத்தில் 4-வது கட்டமாக 53 சட்டப்பேரவை தொகுதிகளில் இன்று தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி 12 மாவட்டங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

12 மாவட்டங்கள்

உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் 403 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. மிகப்பெரிய மாநிலமாக இருப்பதாலும், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதாலும் இங்கு 7 கட்டங்களா தேர்தல்கள் நடத்தப்படுகிறது.

முதல் கட்டமாக கடந்த 11-ந்தேதி 73 தொகுதிகளிலும், 2-வது கட்டமாக 15-ந்தேதி 67 தொகுதிகளிலும், 3-வது கட்டமாக கடந்த 19-ந்தேதி 69 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.

இந்நிலையில் இன்று ரேபரேலி, பிரதாப்கர், கவுசாம்பி, அலகாபாத், ஜலாவுன், ஜான்சி, லலித்பூர், மகோபா, பந்தா, ஹமிர்பூர், சித்திரகூட் மற்றும் பதேப்பூர் ஆகிய 12 மாவட்டங்களில் உள்ள 53 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

1.84 வாக்காளர்கள்

இதையொட்டி துணை ராணுத்தினரும், போலீசாரும் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தொகுதிகளில் மொத்தம் 680 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மொத்தம் 84 லட்சம் பெண் வாக்காளர்கள் உள்பட 1.84 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.

அதிகபட்சமாக அலகாபாத் வடக்கு தொகுதியில் 26 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ககா, மஞ்சன்பூர், குண்டா ஆகிய தொகுதிகளில் மொத்தமே 6 வேட்பாளர்கள் மட்டுமே களத்தில் உள்ளனர்.

வெற்றி வரலாறு

கடந்த 2012-ல் நடைபெற்ற தேர்தலின்போது, இந்த 53 தொகுதிகளில் 24 தொகுதியை சமாஜ்வாதி கட்சி வென்றது. பாஜக 5 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் 15 தொகுதிகளிலும், காங்கிரஸ் 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.

தற்போதைய தேர்தலையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி உள்ளிட்டோர் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டனர்.

சோனியா காந்தி

கடந்த 1998-ல் இருந்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உத்தரப்பிரதேச தேர்தல்களில் பிரசாரம் மேற்கொண்டு வந்தார். இந்நிலையில், உடல் நலக் குறைவு காரணமாக அவர் இந்த தேர்தலில் பிரசாரம் மேற்கொள்ளவில்லை.

4-வது கட்ட தேர்தலுக்கு குறைந்த நாட்களே இருந்த நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி பிரசாரத்தை மேற்கொண்டனர். தனி நபர் தாக்குதல்களையும் இந்த பிரசாரத்தின்போது காண முடிந்தது.

பிரதமர் நரேந்திர மோடி சமாஜ்வாதி - காங்கிரஸ் கூட்டணியையும், பகுஜன் சமாஜ் கட்சியையும் அதன் தலைவர்களையும் தாக்கி பேசினார். இதற்கு அகிலேஷ் யாதவும், மாயாவதியும் பதிலடி கொடுத்தனர்.

தீவிர பிரசாரம்

ஊழல் என்பதன் பொருள் சமாஜ்வாதி கட்சி, அகிலேஷ் யாதவ், மாயாவதி, காங்கிரஸ் என்றும், பகுஜன் சமாஜ் கட்சி என்பது மாயாவதி சொத்துக் கட்சி என்றும் மோடி கூறினார். இதற்கு மாயாவதி, ‘தலித்துகளுக்கு எதிரானவர் மோடி’ என்று விமர்சித்தார்.

குறிப்பாக கழுதை என்று மோடியை நேராக சொல்லாமல் மறைமுகமாக அகிலேஷ் யாதவ் விமர்சித்தார். அவர் பேசுகையில், ‘இந்த நூற்றாண்டின் மிகப்பெரும் இந்தி நடிகர் (அமிதாப் பச்சன்) குஜராத் கழுதைகளை பிரபலப்படுத்து வேலையில் ஈடுபடக் கூடாது’ என்று கூறியிருந்தார். நடிகர் அமிதாப் பச்சன் குஜராத் மாநிலத்தின் விளம்பரத் தூதுவராக இருந்து வருகிறார்.

அடுத்த கட்டங்கள்

அனல் பறந்த 4-வது கட்ட தேர்தல் பிரசாரத்தின் முடிவில் இன்றைக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வரும் 27-ந்தேதி 5-வது கட்டமாகவும், அடுத்தமாதம் 4-ந்தேதி 6-வது கட்டமாகவும், 8-ந்தேதி 7-வது கட்டமாகவும் உத்தரப்பிரதேசத்தில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம், மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் பதிவான வாக்குகள் மார்ச் 11-ந்தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

Follow Us:
Download App:
  • android
  • ios