கொரோனா தடுப்பு பணிக்காக அனைத்து எம்.எல்.ஏ.,க்கள் நிதியில் தலா ரூ.1 கோடி பிடித்தம் செய்து மாநில அளவில் பயன்படுத்தி கொள்ள முதல்வர்  எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு தேவைப்படும் மருத்துவ கருவிகள் வாங்க அரசியல் கட்சியினர் நிதியுதவியை வழங்கி வருகின்றனர். அந்த அடிப்படையில், அரவக்குறிச்சி எம்.எல்.ஏ செந்தில்பாலாஜி  ஒரு கோடியே 3 லட்சம் ரூபாயை தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கரூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வழங்கினார். முதலில் ஏற்றுக்கொண்ட ஆட்சியர் அலுவலகம் பிறகு, தொகுதி மேம்பாட்டு நிதியை அரவக்குறிச்சிக்குள் மட்டுமே பயன்படுத்த முடியும் என கூறி திடீரென நிராகரித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழக அரசின் இந்த செயலுக்கு அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், இதற்கு பதிலளித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி: எம்.எல்.ஏ.,க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து தலா ரூ.1 கோடி பிடித்தம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை ஒருங்கிணைந்து மாநில அளவில் பயன்படுத்தப்படும். மாவட்ட, மாநில அளவில் மருத்துவ உபகரணம், மருந்து வாங்கவும், தடுப்பு நடவடிக்கைக்கும் பணம் பயன்படுத்தி கொள்ளப்படும்.

தொகுதி மேம்பாட்டு நிதி விதிமுறைப்படி சப்பந்தப்பட்ட பகுதிகளில் தான் நிதியை பயன்படுத்த முடியும். எம்.எல்.ஏ.,க்கள் பரிந்துரைப்படி வரையறுக்கப்பட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய முடியும். இதை அறியாமல், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், வழிமுறைகளின்படி செயல்பட்டதை குறை சொல்கிறார். சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ., நினைத்தால், தங்களது தொகுதிக்கு ரூ.25 லட்சம் கூடுதலாக பயன்படுத்த முடியும் என்றும் கூறியுள்ளார்.