தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகம் முடங்கியது. கொரோனாவை ஒழிக்கவும், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரங்களை இழந்தவர்களுக்காகவும் தமிழக அரசு பல்வேறு அறிவிப்புகளையும் வெளியிட்டன. ஆனால், எதிர்க்கட்சிகளோடு ஆலோசனை நடத்தி எந்தவிதமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று திமுக உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டி வந்தன. 
கொரோனா வைரஸை காரணம் காட்டி திமுக தலைவர் பல அறிக்கைகளை தினந்தோறும் வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருந்தார். அப்படி மு.க. ஸ்டாலின் வைத்த பல கோரிக்கைகளை பின்பற்றி தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்வது, கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்துவது, இ பாஸ் முறையை ரத்து செய்வது போன்றவை மு.க. ஸ்டாலின் முன்வைத்த கோரிக்கைகள்தான். 
இந்நிலையில் தமிழகத்தில் இ பாஸ் நடைமுறை ரத்து செய்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டார். இதுகுறித்து திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் ட்விட்டரில் பதிவு ஒன்றை இட்டுள்ளார். அதில், “இ பாஸ் முறை ரத்து உள்பட தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்திய விஷயங்களை அச்சு பிசகாமல் அறிவித்துள்ளார் தமிழக முதலமைச்சராக இருக்கக் கூடிய எடப்பாடி பழனிசாமி. 10-ம் வகுப்பு, கல்லூரி தேர்வுகள் ரத்து என அனைத்திலும் தமிழகத்தின் அறிவிக்கப்படாத முதல்வராக தலைவர் சொல்கிறார், ஈபிஎஸ் செய்கிறார்” உதயநிதி ஸ்டாலின் அதில் குறிப்பிட்டுள்ளார்.