ரூ.500, ரூ.1000 நோட்டுகளை தடை செய்ய முடிவை மத்திய அரசின் அறிவுரைப்படியே எடுத்தோம். இந்த முடிவை நவம்பர் 7-ந்தேதி எங்களுக்கு கூறினார். 

மறுநாள் இந்த ரூபாய் நோட்டு தடையை பரிந்துரைத்தோம் என்று நாடாளுமன்றக் குழுவிடம் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் அறிக்கைக்கும், ரிசர்வ் வங்கி அறிக்கைக்கும் பல முரண்பாடுகள் தொடர்ந்து இருந்து வருகின்றன. ரூ.500, ரூ.1000 நோட்டுகளை தடை செய்வது என்பது ரிசர்வ் வங்கி எடுத்த முடிவு என்று மத்திய அரசு கூறி வருகிறது. 

ஆனால்,  அரசின் ஆலோசனைப்படியே இந்த முடிவை எடுத்ததாக ரிசர்வ் வங்கி, இப்போது கூறி இருக்கிறது. இதில் எது உண்மை என்பது தெரியவில்லை.

ரூபாய் நோட்டு அறிவிப்பு குறித்து ரிசர்வ் வங்கி  கடந்த டிசம்பர் 22-ந்ேததி காங்கிரஸ் தலைவர் எம். வீரப்ப மொய்லி தலைமையிலான நாடாளுமன்ற நிதிக் குழுவிடம் 7 பக்கம் கொண்ட அறிக்கையை அளித்தது. 

அதில், கூறப்பட்டு இருப்பதாவது 

அறிவுரை

 நாட்டில் கள்ள நோட்டுகள், தீவிரவாதிகளுக்கு நிதி அளித்தல், கருப்புபணம் ஆகிய முக்கியமான 3 சிக்கல்களை தீர்க்க  ரூ.500, ரூ.1000 நோட்டுகளை தடை செய்வது குறித்து மத்திய ரிசர்வ் வங்கி ஆலோசிக்க வேண்டும் என்று மத்திய அரசு எங்களுக்கு அறிவுரை கூறியது.  இந்த ஆலோசனையையும், அறிவுரையையும் நவம்பர் 7-ந்தேதி எங்களுக்கு அளித்தது.

பரிந்துரை

அதன்பின், அடுத்த நாள், அதாவது, ரூபாய் நோட்டு தடை அறிவிப்பு வெளியான நவம்பர் 8-ந்தேதி அரசின் அறிவுரையை ஆய்வு செய்தோம், ஆழமாக கலந்தாய்வு செய்தோம். இறுதியில்  மத்திய அரசுக்கு ரூ. 500, ரூ.1000 நோட்டுகளை தடை செய்யக் கூறி பரிந்துரை செய்தோம்.

சிலமணி நேரங்கள்

நாங்கள் பரிந்துரை செய்த சில மணிநேரங்களில் பிரதமர் மோடி அமைச்சரவையைக் கூட்டி, ரூபாய் நோட்டு தடை குறித்த அறிவிப்பை வெளியிட்டார். சில அமைச்சர்கள் ரிசர்வ் வங்கியின் பரிந்துரையின் படிதான் மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டதாக இன்னும் தொடர்ந்து கூறி வருகிறார்கள். 

கடந்த சில ஆண்டுகளாக அதிகமான பாதுகாப்பு அம்சங்களுடன், போலி ரூபாய் நோட்டு தயாரிக்க முடியாத வகையில், புதிய ரூபாய்களை அச்சடிப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். அதே சமயம், அரசு கருப்புபணத்தை கட்டுப்படுத்தவும், தீவிரவாதத்துக்கு எதிராகவும் போராடி வந்தது.

தகவல்

உயர்மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளை கருப்புபணம் பதுக்குபவர்கள் எளிதாக பதுக்கிவிடுகிறார்கள், அதிகமாகக் கிடைக்கிறது. இதில் கள்ள நோட்டுகள் அடிக்கப்பட்டு தீவிரவாதிகளும் பயன்படுத்துகிறார்கள் என்று மத்திய உளவுத்துறையும், அமலாக்கப்பிரிவும் அரசுக்கு தகவல் அளித்தது.

ஆர்வம்

இந்த தகவலுக்கு பின் அதிக பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் முடிவுக்கு அரசும், ரிசர்வ் வங்கியும் மேற்கொண்டது. தொடக்கத்தில் ரூபாய் நோட்டு தடை குறித்து எந்த உறுதியான முடிவும் எடுக்கவில்லை. ஆலோசிக்கவும் இல்லை. புதிய ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்துவதில் மட்டுமே  ஆர்வமாக இருந்தோம்.

ரூ.5 ஆயிரம் நோட்டு

கடந்த 2014ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்கு ரூ. 5000, ரூ.10000 நோட்டுகளை வெளியிடுவது குறித்து ஆலோசித்தது. ஆனால், நாட்டில் நிலவும் பணவீக்கத்தைப் பொறுத்தும், பணத்தின் மேலாண்மை, சில்லரை வழங்குவது உள்ளிட்ட நடைமுறை சிரமங்களைப் பார்த்து அது கைவிடப்பட்டது. அதன்பின், கடந்த 2016ம் ஆண்டு, மே 18-ந்தேதி  ரூ.2 ஆயிரம் நோட்டை அறிமுகம் செய்ய அரசு கூறியது.

அதன்பின் மே 27-ந்தேதி புதிய வடிவத்தில், அளவுகளில், அதிக பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய ரூ. 2 ஆயிரம் நோட்டு வெளியிட முடிவு செய்யப்பட்டது. ஜூன் 7-ந்தேதி புதிய ரூ.2 ஆயிரம் நோட்டு வெளியிட இறுதி ஒப்புதல் அளிக்கப்பட்டு, அச்சகங்களில் அச்சடிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

குறிப்பிட்ட அளவு ரூ. 2 ஆயிரம் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு இருப்பு வைக்கப்பட்ட பின், ரூ.500, ரூ.1000 நோட்டுகள் தடை செய்து அறிவிப்பு வெளியானது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பணம் மதிப்பிழப்பு விவகாரத்தில் மோடிதான் தானாக முடிவெடுத்துள்ளார் என்பது தெளிவாகிறது.