தற்போது  எஸ்.சி. , எஸ்.டி., பிசி. எம்பிசி என பல வகைகளாக பிரிக்கப்பட்டு அரசுத் துறைகளில் கல்வி, வேலை வாய்ப்பு என இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. பொதுவாக இந்தியாவில் சாதிய ரீதியிலான இடஒதுக்கீட்டுக்கு ஆங்காங்கே அவ்வப்போது எதிர்ப்புகள் கிளம்பும். அதற்கு மாற்றாக வைக்கப்படும் தீர்வு, இடஒதுக்கீடு பொருளாதார அடிப்படையில் வழங்கப்படவேண்டும் என்பது. இந்த விவாதம் இந்தியாவில் நீண்ட காலமாக ஒலித்துக்கொண்டே தான் உள்ளது. 

இந்நிலையில் பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் ஜாதியைச் சேர்ந்தவர்களுக்கு அரசு மற்றும் கட்சியில் உயர்ந்த பதவிக்கு வருவாய் ரீதியாக இட ஒதுக்கீடு முறையை அமல் படுத்த மோடி அரசு முடிவு செய்துள்ளது.

இதற்கான நடைமுறைகள் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் தொடங்கும் என்று பாஜக அரசு அறிவித்துள்ளது. தற்போதுள்ள இட ஒதுக்கீட்டு முறையைக் கொண்டு உயர் ஜாதியினருக்கு தனி இட ஒதுக்கீடு முறை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே மோடி அரசின் ஐடியாவாக உள்ளது.

அதே நேரத்தில் உயர் ஜாதியினருக்கு  இட ஒதுக்கீடு வழங்கப்படுவதால் எஸ்.சி. , எஸ்.டி., பிசி. எம்பிசி பிரிவினருக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடு எந்த விதத்திலும் பாதிக்கப்படாது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு உள்ளதைப் போல் உயர் ஜாதி இந்துக்களுக்காக, 10% இட ஒதுக்கீட்டிற்கான ஒரு சட்டத் திருத்தம் கொண்டு வரவும் முடிவு  செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட சமூகத்தினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டுக்கு மத்திய அமைச்சரவை இன்று  ஒப்புதல் வழங்கியது. 

 

அதாவது, பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படவுள்ளது. ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கும் குறைவாக உள்ளவர்கள், 5 ஏக்கருக்கு குறைவாக விவசாய நிலம் வைத்திருப்பவர்கள், 1000சதுரஅடிக்கு குறைவாக வீடு வைத்திருக்கும் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ,நகராட்சிக்குட்பட்ட இடத்தில் 1000  சதுர அடி வீடு வைத்திருப்பவர்கள்,நகராட்சி அல்லாத இடத்தில் 2000 சதுரஅடிக்கு குறைவாக வீட்டு மனை வைத்திருப்பவர்கள் இதற்கு தகுதியுடையவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது

இந்நிலையில் தலித் பிரிவைச் சேர்ந்த  மத்திய அமைச்சர்கள் ராமதாஸ் அத்வாலே, ராம் விலாஸ் பஸ்வான் ஆகியோர் இந்த இட ஒதுக்கீடு குறித்து ஏற்கனவே தங்கள் கருத்தை வெளியிட்டுள்ளதுடன் அதற்கு ஆதரவிம் அளித்துள்ளனர். அதே போல் குஜராத் அரசும் பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட சமூகத்தினருக்கான ,இட ஒதுக்கீடு அளிப்பது குறித்து முடிவு எடுத்துள்ளது. ஏற்கனவே ராஜஸ்தான் அரசின் இந்த முடிவுக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இது விரைவில் சட்டரீதியாக சரி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய இட ஒதுக்கீடு வருங்காலத்தில் பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீட்டுக்கு வழி வகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.