சரியாக 20 ஆண்டுகளுக்கு முன் 1999ம் ஆண்டு மே மாதம் 3ம் நாள், காஷ்மீர் மாநிலத்தின் கார்கில் பள்ளத்தாக்கில் தீவிரவாதிகளும், பாகிஸ்தான் ராணுவத்தினரும் ஊடுருவியிருப்பதாக இந்திய ராணுவத்தினருக்கு தகவல் கிடைத்தது. 

இதையடுத்து ரோந்து சென்ற 5 இந்திய வீரர்களைச் சிறைப்பிடித்த பாகிஸ்தான் ராணுவம் அவர்களைச் சித்ரவதை செய்து கொடூரமாகக் கொன்றது. இதனைத் தொடர்ந்து தாக்குதல் நடத்தச் சென்ற மிக் மற்றும் மிராஜ் ரக விமானங்களையும் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது.

தொடர் தாக்குதலால் முதலில் பாகிஸ்தான் வெற்றி முகம் காட்டினாலும், அதுவரை இலகுரக தாக்குதல்களை நடத்தி வந்த இந்தியா முழு உக்கிரத்துடன் களத்தில் இறங்கியது. இதையடுத்து இந்திய பீரங்கிகள் களமிறங்கி குண்டு மழை பொழிந்தன.ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் படைப் பிரிவினரின் துப்பாக்கிகள் தடதடக்கும் சப்தம் பனிமலையைப் பதற வைத்தது.

இதன் பயனாக திராஸ், தோலாலிங் உள்ளிட்ட பகுதிகளை இந்தியா கைப்பற்றியது. மீண்டும் மீண்டும் அதிரடித் தாக்குதல்கள் மூலம் பாயின்ட் ஆகிய நிலைகளையும் முக்கிய சிகரமான டைகர் ஹில்ஸ் பகுதியையும் இந்திய ராணுவம் கைப்பற்றியது. 

இறுதியாக இந்தியாவின் தொடர் தாக்குதலை எதிர்பாராத பாகிஸ்தான், போரை நிறுத்த உதவி செய்யுமாறு அமெரிக்காவிடம் மண்டியிட்டது. ஆனால் அதற்குள் பாகிஸ்தான் தரப்பில் ஆயிரத்து 200க்கும் மேற்பட்ட வீரர்களையும், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீவிரவாதிகளையும் கொன்று குவித்தது இந்திய ராணுவம். நமது தரப்பில் 576 வீரர்கள் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்து கார்கிலில் வெற்றிக் கொடியைப் பறக்க விட்டனர். அந்த நாள்தான் ஜூலை 26.

இந்த வெற்றியின் நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. கார்கில் போரின் 20-ம் ஆண்டு வெற்றி தினத்தை முன்னிட்டு உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு நாடு முழுவதும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

கார்கில் போர் வெற்றி தினத்தை முன்னிட்டு ட்விட்டரில் வீடியோ ஒன்றை பதிவிட்டு பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார். அதில், இந்திய ராணுவ வீரர்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இந்நாள் நமது வீரர்களின் தைரியம், துணிச்சல் மற்றும் அர்ப்பணிப்பை நினைவூட்டுகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையயே காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி கடந்த 2004 முதல் 2009 ஆம் ஆண்டு வரை கார்கில் வெற்றியைக் கொண்டாடவில்லை என பாஜக மாநிலங்களவை எம்.பி ராஜீவ் சந்திரசேகர் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், கடந்த 2004 முதல் 2009 வரை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தபோது கார்கில் வெற்றியை கொண்டாடவோ அல்லது அதற்கான மரியாதையையோ கொடுக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த ஏ.கே.ஆண்டனிக்கு இது குறித்து தான் 2009 ஆண்டு நினைவூட்டல் கடிதம் எழுதியதை குறிப்பிட்டுள்ளார். அதில் எதிர்வரும் இளம் சந்ததியினர் அறிந்து கொள்ளும்  வகையில் ஜுலை 26 ஆம் தேதியை கார்கில் வெற்றி தினமாக கொண்டாட வேண்டும் என அந்த கடிதத்தில் அறிவுறுத்தியிருத்ததையும் ராஜீவ் சந்திரசேகர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் கார்கில் வெற்றி தினத்தை ஐக்கிய முற்போக்கு கூட்ணி அரசு வெற்றி தினத்தை கொண்டாடவில்லை என்றும் அதற்குரிய மரியாதையையும் கொடுக்கவில்லை எனவும் ராஜீவ் சந்திசேகர் குற்றம்சாட்டியுள்ளார்.