ஊட்டியில் ஆளுநர் மாளிகையில் துணைவேந்தர்கள் மாநாட்டை ஆளுநர் கூட்டியதும் அந்த நிகழ்வுக்கு உயர்க் கல்வித் துறை அமைச்சரும் இணை வேந்தருமான பொன்முடியை அழைக்காததும் சர்ச்சையானது.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியும் முதல்வர் மு.க. ஸ்டாலினும் பங்கேற்க உள்ளனர். சென்னைப் பல்கலைக்கழகத்தின் 164-ஆவது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் இன்று காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த விழாவில் பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆர்.என்.ரவி தலைமை தாங்கி விழாவை நடத்தி வைக்கிறார். விழாவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பட்டமளிப்பு விழா உரையை நிகழ்த்த உள்ளார். உயர்கல்வித் துறை அமைச்சரும், பல்கலைக்கழக இணை வேந்தருமான பொன்முடி விழாவில் வாழ்த்துரை வழங்க உள்ளார்.

விழாவில் பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.கவுரி, பதிவாளர் (பொறுப்பு) இளங்கோவன் வெள்ளைச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கும் இடையே மோதல் போக்கு உருவான பிறகு இவர்கள் இருவரும் பங்கேற்கும் முதல் நிகழ்வு இதுவாகும். நீட் தேர்வு விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் இருந்த ஆளுநர் மீது திமுக அரசு அதிருப்தியில் இருந்தது. இதனையடுத்து தமிழ்ப் புத்தாண்டையொட்டி ஆளுநர் வைத்த தேநீர் விருந்தை தமிழக அரசு புறக்கணித்தது. மேலும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்காமல் அமைச்சர்கள் பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் புறக்கணித்தனர்.

ஊட்டியில் ஆளுநர் மாளிகையில் துணைவேந்தர்கள் மாநாட்டை ஆளுநர் கூட்டியதும் அந்த நிகழ்வுக்கு உயர்க் கல்வித் துறை அமைச்சரும் இணை வேந்தருமான பொன்முடியை அழைக்காததும் சர்ச்சையானது. சில தினங்களுக்கு முன்பு கோவை பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்றபோது உயர்க் கல்வி துறை அமைச்சர் பொன்முடியும் பங்கேற்றார். இந்த விழாவில் ஆர்.என். ரவி இந்தி மொழிக்கு ஆதரவாகவும் பொன்முடி இந்திக்கு எதிராகவும் பேசியது விவாதமானது.
