அனைத்து கட்சிகளும் திமுக கூட்டணியில் தனிச்சின்னம் என்று வலியுறுத்தி வரும் நிலையில் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடுவது குறித்து பரிசீலிக்க உள்ளதாக திருமாவளவன் கூறி வருகிறார்.

கடந்த 2001ம் ஆண்டு முதல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தேர்தல் அரசியலில் உள்ளது. இதுவரை 4 சட்டமன்ற தேர்தல்களை அந்த கட்சி எதிர்கொண்டுள்ளது. ஆனால் அந்த கட்சியின் மூலம் எம்எல்ஏ ஆனவர்கள் மூன்றே மூன்று பேர் தான். இதில் 2001ம் ஆண்டு மங்களூர் தொகுதியில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு திருமாவளவன் எம்எல்ஏ ஆனார். அதன் பிறகு 2006ம் ஆண்டு தேர்தலில் அதிமுக கூட்டணியில் அம்பு சின்னத்தில் போட்டியிட்டு இரண்டு விசிக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். இந்த வெற்றிகளை தவிர்த்து பார்த்தால் சட்டப்பேரவை தேர்தலில் 2011 மற்றும் 2016ம் ஆண்டு விசிக படுதோல்வியை சந்தித்துள்ளது.

இதே போல் விசிக சார்பில் தனிச்சின்னத்தில் போட்டியிட்டு திருமாவளவன் எம்பி ஆகியுள்ளார். ஆனால் 2009 மற்றும் 2014ம் ஆண்டுகளில் திமுக கூட்டணியில் தனிச்சின்னத்தில் போட்டியிட்ட விசிக வேட்பாளர்கள் தோல்வியையே தழுவினர். ஆனால் 2019ல் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு விசிகவின் ரவிக்குமார் எம்பி ஆகியுள்ளார். இ ப்படி வெற்றி வாய்ப்புகளை பார்க்கும் போது தனிச்சின்னத்தில் போட்டியிட்டால் அதிகம் தோல்வியும், திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டால் அதிகம் வெற்றியும் விசிக பெற்றுள்ளது.

அதோடு மட்டும் இல்லாமல் விசிக அங்கீகரிக்கப்பட்ட கட்சி இல்லை. இதனால் அந்த கட்சிக்கு என்று நிரந்ரமான சின்னம் எதுவும் இல்லை. இதுவரை அம்பு, மோதிரம், இரட்டை மெழுகுவர்த்தி, நட்சத்திரம் என டஜன் கணக்கில் சின்னத்தில் விசிக போட்டியிட்டுள்ளது. இதனால் விசிகவின் சின்னம் எது என்பதில் அந்த கட்சியினருக்கே குழப்பம் இருக்கும். அதோடு அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு தேர்தலுக்கு 14 நாட்களுக்கு முன்னரே சின்னம் ஒதுக்கப்படும். இந்த 14 நாட்களுக்குள் சின்னத்தை தொகுதி முழுக்க பிரபலப்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது.

இதனால் வேறு தேர்தல்பணிகளில் விசிக வேட்பாளர்களால் கவனம் செலுத்த முடியாமல் போய்விடுகிறது. பிரபலமாகாத சின்னத்தில் விசிக வேட்பாளர்கள் களம் இறங்கும் நிலையில் அதற்கு இணையான அல்லது அதே போன்ற சின்னத்தில் வேறு சில சுயேட்சை வேட்பாளர்களை எதிர்கட்சி களம் இறக்கும். இதனால் எந்த சின்னம் விசிக வேட்பாளருடையது என தெரியாமல் வாக்குகள் சிதறும் வாய்ப்புகளும் உண்டு. அத்தோடு விசிக வேட்பாளர்களை எதிர்த்து களம் இறங்கும் அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் பிரபலமான சின்னத்துடன் போட்டியிடுவதால் அவர்களுக்கான வெற்றி வாய்ப்பு அதிகம் ஆகிறது.

இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு தான் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளை ஒப்பிடுகையில் தனிச்சின்ன விவகாரத்தில் திருமாவளவன் வேறு ஒரு முடிவை எடுத்து வருகிறார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக இரண்டு தொகுதிகளை ஒதுக்கிய நிலையில் ஒரு தொகுதியில் தனிச்சின்னமும் மற்றொரு தொகுதியில் திமுக சின்னத்திலுமே விசிக போட்டியிட்டது. இதே போல் சட்டப்பேரவை தேர்தலிலும் திமுகவின் உதய சூரியன் சின்னத்திலேயே போட்டியிட திருமா முடிவெடுத்துள்ளதாக கூறுகிறார்கள். திமுக கொடுக்கும் தொகுதிகளில் கணிசமான தொகுதிகளில் வென்றால் தொங்கு சட்டசபை அமைந்தால் ஆட்சியில் பங்கேற்கும் வாய்ப்பு உருவாகும்.

மாறாக தனிச்சின்னம் என்று பிடிவாதம் பிடித்து 2011 மற்றும் 2016ஐ போல் அனைத்திலும் தோற்றால் போராடி எத்தனை தொகுதிகளை வாங்கியிருந்தாலும் பலன் இல்லை. எனவே தான் திமுகவின் சின்னத்தில் போட்டியிடுவது குறித்து திருமா யோசித்து வருவதாகவும் அவரது முடிவை அதனை ஏற்பதாகவே அமையும் என்கிறார்கள்.