சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் தனிச்சின்னத்தில் தான்போட்டி என்று பிடிவாதமாக கூறியிருந்த திருமாவளவன் திடீரென அதில் இருந்து இறங்கி வந்திருப்பது விசிக நிர்வாகிகளையே அதிர வைத்துள்ளது.

கடந்த காலங்களை போல் அல்லாமல் இந்த சட்டப்பேரவை தேர்தலில் மிக மிக அதிக தொகுதிகளில் திமுக வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என்பது தான் பிரசாந்த் கிஷோர் – ஸ்டாலின் வியூகமாக உள்ளது. கடந்ததேர்தலில் மூன்றாவது அணியை உருவாக்கி, 234 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்களை நிறுத்தியதால் தான் ஜெயலலிதாவால் மீண்டும் ஆட்சியில் அமர முடிந்தது. அதே சமயம் காங்கிரஸ் போன் றகட்சிகளுக்கு 41 தொகுதிகள் என்று வாரி வழங்கியதே திமுக எதிர்கட்சியாக அமரவும் காரணமாக இருந்தது. இதனை உணர்ந்து தான் திமுக இந்த முறை அதிக தொகுதிகளில் போட்டியிட முடிவுசெய்துள்ளது.

முடிந்தால் 234 தொகுதிகளிலும் உதய சூரியன் சின்னத்தை நிறுத்த வேண்டும் என்பது தான் பிரசாந்த் கிஷோர் போட்டுக் கொடுத்த கணக்காக உள்ளது.இதற்காக தற்போது திமுக கூட்டணியில் உள்ள விசிக, மதிமுக, கொ.ம.க.தே.க போன்ற கட்சிகளுக்கு உதய சூரியன் சின்னத்தில் கூட்டணியில் தொகுதிகளை ஒதுக்க திமுக மேலிடம் முடிவு செய்துள்ளது.இதற்கு கொங்கு நாடு மக்கள்தேசிய கட்சி ஒப்புதல் தெரிவித்துவிட்டது. விசிக தலைவர் திருமாவளவன் இதற்கு ஆரம்பகட்டத்திலேயே எதிர்ப்பு தெரிவித்தார். விசிக தனிச்சின்னத்தில் தான் போட்டியிடும் என்று கடந்த மாதம் திட்டவட்டமாக தெரிவித்தார்.

ஆனால் திடீரென தனது நிலைப்பாட்டில் இருந்து திருமாவளவன் இறங்கி வந்திருப்பதாக கூறுகிறார்கள். கடந்த மாதம் வரை விசிக தனிச்சின்னத்தில் போட்டி என்று கூறி வந்த திருமாவளவன் கடந்த சனிக்கிழமை அன்று, கூட்டணியில் நலனுக்காகவே உதய சூரியன் சின்னத்தில் கூட்டணி கட்சி வேட்பாளர்களை போட்டியிடுமாறு திமுக கூறி வருவதாகவும் அதில் கூட்டணி நலன் உள்ளதாக கூறி அதிர வைத்தார் திருமாவளவன், அதாவது சட்டப்பேரவை தேர்தலில் விசிக திமுக கூட்டணியில் உதய சூரியன் சின்னத்தில் தான்போட்டியிடப்போகிறது என்பதுதான் திருமாவின் இந்த திடீர் பல்டிக்கு காரணம்.

போன மாதம் வரை தனிச்சின்னம் என்று கூறி வந்த திருமா திடீரென உதய சூரியன் சின்னத்தில்போட்டியிடுவது ஒன்றும் பிரச்சனை இல்லை என்கிற ரீதியில் பேசியதன் பின்னணியில் சபரீசன் உள்ளதாக கூறுகிறார்கள். திருமாவை சபரீசன் நேரடியாக சந்தித்து கடந்த தேர்தலில் கூட்டணி கட்சிகளால் திமுகவிற்கு ஏற்பட்ட இழப்பை விவரமாக எடுத்துரைத்துள்ளார். அத்தோடு இதற்கு முன்பு வரை விசிக 2 எம்பி தொகுதிகளில் போட்டியிட்டால் ஒன்றே ஒன்றில் தான் வெற்றி பெற்றதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கு காரணம் தனிச்சின்னம் தான் என்பதையும் திருமாவிடம் சபரீசன் எடுத்து கூறியதாக சொல்கிறார்கள். அதோடு மட்டும் அல்லாமல் உதயசூரியன் சின்னத்தில் விசிக வேட்பாளர்கள் போட்டியிட்டால் அதற்கு திமுக தரப்பில் இருந்து என்னென்ன உதவிகள் செய்யப்படும் என்பதையும் சபரீசன் மிக மிக விளக்கமாக எடுத்துரைத்ததாகவும் கூறுகிறார்கள். இதனால் தான் திருமாவளவன் திடீரென கூட்டணி நலன் தான் தனிச்சின்னத்தை விட முக்கியமானது என்று பேட்டி அளித்திருப்பதாக சொல்கிறார்கள். அதோடு மட்டும் அல்லாமல் உதய சூரியன் சின்னத்தில் போட்டி என்றால் விசிக வேட்பாளர்களுக்கான தேர்தல் செலவுகளை திமுகவே ஏற்றுக் கொள்ளும் என்று திருமா நம்புகிறார்.

இதனால் தான் இவ்வளவு நாள் கட்சி நடத்தி, பல தேர்தல்களில் தனிச்சின்னத்தில் போட்டியிட்டாலும் தற்போது உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட விசிகவை திமுகவிடம் திருமா அடகு வைத்துவிட்டதாக பேசிக் கொள்கிறார்கள்.