union ministry meeting today
பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் சில சட்டத்திருத்தங்கள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
ஸ்வீடன், பிரிட்டன், ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்ற பிரதமர் மோடி, இன்று காலை டெல்லி திரும்பினார். டெல்லி திரும்பியதும் அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த கூட்டத்தில், சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் போக்ஸோ சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வது, பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுவிட்டு வெளிநாட்டிற்கு தப்பி செல்வோரின் சொத்துக்களை முடக்குவது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதித்து முடிவு எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவைதொடர்பான அவசர சட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் பெறப்படும் என தெரிகிறது.
சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து வரும் நிலையில், அப்படியான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று தேசிய அளவில் வலுவான குரல்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில், 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமைகள் செய்வோருக்கு மரண தண்டனை விதிப்பது குறித்து இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்படலாம் என தெரிகிறது.
