மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக முன்னாள் தேசியத் தலைவருமான அமித்ஷா 2 நாள் பயணமாக இன்று சென்னை வருகிறார்.தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி மற்றும் திமுகவை வீழ்த்துவது குறித்த திட்டங்களை வகுத்து கொடுக்க இருக்கிறார். இதனால் தமிழகத்தில் அரசியல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.

மெட்ரோ ரயில் உட்பட ரூ. 67,378 கோடியிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் அவர், சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் பேச்சு நடத்துகிறார்.

இன்று காலை 10.30 மணிக்கு டெல்லி யில் இருந்து புறப்படும் அமித் ஷா, பிற் பகல் 1.45 மணிக்கு சென்னை விமான நிலை யம் வந்தடைகிறார். அங்கு அவருக்கு தமிழக அரசு சார்பிலும் பாஜக சார்பிலும் வரவேற்பு அளிக்கப்படுகிறது. அங்கிருந்து ராஜா அண்ணாமலைபுரம் லீலா பேலஸ்க்கு சென்று ஓய்வெடுக்கிறார். பின்னர், கலைவாணர் அரங்கத்தில் நடக்கும் அரசு விழாவில் பங்கேற்கிறார்.

தமிழக அரசின் சார்பில் ரூ.380 கோடி யில் உருவாக்கப்பட்டுள்ள தேர்வாய்க்கண்டிகை புதிய நீர்த்தேக்கத் திட்டத்தை மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். மேலும், ரூ.61,843 கோடியில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் -2ம் கட்ட பணிகள், கோவை அவினாசி சாலையில் ரூ.1,620 கோடி மதிப்பில் உயர்மட்டச் சாலை திட்டம், கரூர் மாவட்டம் நஞ்சைபுகலூரில் ரூ.406 கோடியில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை திட்டம், ரூ.309 கோடி மதிப்பில் சென்னை வர்த்தக மையம் விரிவுபடுத்தும் திட்டம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சார்பில் வல்லூரில் ரூ.900 கோடி மதிப்பிலான பெட்ரோலியம் முனையம், ஆமுல்லை வாயலில் ரூ.1,400 கோடி மதிப்பில் லூப் பிளான்ட் அமைத்தல் மற்றும் காமராஜர் துறைமுகத்தில் ரூ.900 கோடியில் புதிய இறங்குதளம் என்று மொத்தம் ரூ. 67,378 கோடியிலான திட்டங்களுக்கு காணொ லிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டி உரை யாற்றுகிறார்.

இந்நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு லீலா பேலஸ் ஓட்டலுக்கு திரும்பும் அமித்ஷா, இரவு 7.30 மணியளவில் பாஜக மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்களுடன் சட்டப்பேரவைத் தேர் தல் பணிகள், கூட்டணி, அதிமுக-பாஜக உறவு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.அதனைத் தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு பாஜக மாநில மையக் குழு கூட்டத்திலும் பங்கேற்கும் அவர் அதிமுகவுடனான கூட்டணியை தொடர்வதா அல்லது அதிமுக, திமுகவுக்கு மாற்றாக 3-வது அணியை அமைப்பதா என்பது குறித்தும் தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி குறித்தும் விவாதிக்கிறார்.

பாஜக நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டம் முடிந்ததும் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அமித்ஷாவை சந்திக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இதில் அதிமுக, பாஜக கூட்டணி, வேல் யாத்திரையால் இரு கட்சிகள் இடையே ஏற்பட்டுள்ள மோதல் போக்கு ஆகியவை குறித்து பேச்சு நடத்த இருப்பதாக பாஜகவினர் தெரிவிக்கின்றனர். இன்று இரவு சென்னையில் தங்கும் அமித் ஷா நாளை காலை 10 மணிக்கு டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.