மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

இந்தியாவில் கொரோனா 18 லட்சத்தை நெருங்கிவிட்டது. சாமானியர்கள் முதல் சர்வதேச தலைவர்கள் வரை பாரபட்சமின்றி அனைவரையும் தொற்றிவரும் கொரோனா வைரஸுக்கு, யாரும் விதிவிலக்கல்ல. 

அந்தவகையில், கொரோனாவிற்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள், கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள ஆட்சியாளர்கள், அதிகாரிகள், காவல்துறையினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் கொரோனா தொற்று உறுதியாகிவருகிறது. 

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்த தகவலை அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். 

இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷா, கொரோனா அறிகுறிகள் இருப்பதை உணர்ந்ததும் பரிசோதனை செய்துகொண்டேன். பரிசோதனையில் கொரோனா பாசிட்டிவ் என்று வந்துள்ளது. எனவே மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறேன். எனது உடல்நிலை சீராக உள்ளது. கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள் என்று அமித் ஷா தெரிவித்துள்ளார். 

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஆட்சியாளர்கள் திட்டங்கள் மற்றும் மக்கள் நலன் சார்ந்த பணிகளில் ஈடுபடுவது அவசியம். அந்தவகையில், கொரோன தடுப்பு குறித்து தொடர்ச்சியாக அதிகாரிகளுடன் ஆலோசனைக்கூட்டம் மற்றும் மற்ற பணிகளில் ஈடுபட்டுவந்தார் அமித் ஷா. இந்நிலையில், அவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.