Asianet News TamilAsianet News Tamil

பொருளாதார மீட்சிப் பாதையில் தேசம்.! எம்.பி.-க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை விடுவிக்க மத்திய அரசு ஒப்புதல்.!

கொரோனாவைக் காரணம் காட்டி எம்.பி.-க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை நிறுத்திவைத்த மத்திய அரசின் முடிவை எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடினர்.

Union Cabinet approval to restore MPLADS funds
Author
Delhi, First Published Nov 10, 2021, 6:58 PM IST

கொரோனாவைக் காரணம் காட்டி எம்.பி.-க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை நிறுத்திவைத்த மத்திய அரசின் முடிவை எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடினர்.

உலகையே புரட்டிப்போட்ட கொரோனா இந்தியாவில் தனது கோரத்தாண்டவத்தை ஆடியது. முதல் அலையில் போடப்பட்ட நாடு தழுவிய ஊரடங்கால் இந்திய பொருளாதாரம் அதள பாதாளத்திற்குச் சென்றது. போதிய மருத்துவ உட்கட்டமைப்புகள் இல்லாததால் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு கிட்டத்தட்ட தோல்வியின் விளிம்பு நிலைக்குச் சென்றது. மருத்துவமனைகள் நிரம்பி வழிந்த நோயாளிகள், ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் மருத்துவமனை வளாகங்கள், சாலைகள், வீடுகள் என கொத்துக் கொத்தாக உயிரிழப்புகளும், மயானங்களில் ஒட்டுமொத்தமாக எரிக்கப்பட்ட சடலங்கள், எல்லாவற்றிற்கும் மேலாக கங்கையில் மிதந்த சடலங்கள் என ஒட்டுமொத்த காட்சிகளும் உலகையே உலுக்கின.

Union Cabinet approval to restore MPLADS funds

மருத்துவ உட்கட்டமைப்பை மேம்படுத்தவே நிதி பற்றாக்குறை ஏற்பட்டதால் வளர்ச்சித் திட்டங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. அந்தவகையில் எம்.பி.-க்களின் தொகுதி வளர்ச்சிக்கான மேம்பாட்டு நிதியும் நிறுத்தப்பட்டது. ஆண்டுதோறும், குடிநீர், ஆரம்பக் கல்வி, பொது சுகாதாரம், சுகாதாரம் மற்றும் சாலைகள் போன்றவற்றில் தங்கள் தொகுதிகளில் நீடித்து நிலைக்கும் வளர்ச்சிப் பணிகள் மற்றும் திட்டங்களுக்கு பயன்பகும் வகையில் 5 கோடி ரூபாய் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் வழங்கப்படுவது வழக்கம். கொரோனா சிகிச்சை மற்றும் தடுப்பூசி உள்ளிட்ட செலவுகளை கருத்தில் கொண்டு எம்பிக்களுக்கு, வழங்கப்பட்டு வந்த அந்த தொகுதி மேம்பாட்டுத் தொகை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப் படுவதாக மத்திய நிதியமைச்சகம் அறிவித்தது.

Union Cabinet approval to restore MPLADS funds

ஆனாலும், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய பாராளுமன்ற கட்டடப் பணிகள் மட்டும் நிறுத்தப்படவில்லை. இது எதிர்க்கட்சிகள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. தொகுதி வளர்ச்சி நிதியை ரத்து செய்ததற்கு காங்கிரஸ், திமுக, உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். இருந்தபோதும், அந்த நிதியை விடுவிக்க மத்திய அரசு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்தது. இந்தநிலையில் கொரோனா இரண்டாவது அலை முடிவுக்கு வந்துள்ளதால் வளர்ச்சி திட்டங்களை மீண்டும் செயல்படுத்த மோடி தலைமையிலான மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

Union Cabinet approval to restore MPLADS funds

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய மந்திரி அனுராக் தாகூர் செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தார். அப்போது, எம்.பிக்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை செலவழிக்க மத்திய அரசு அனுமதி வழங்கியதாக அவர் கூறினார். நடப்பாண்டிற்காக மீதமுள்ள மாதங்களில் செலவழிக்க ஒரே தவணையாக ரூ. 2 கோடி நிதி ஒதுக்கப்படும். அடுத்த நிதியாண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ரூ. 5 கோடி இரண்டு தவணைகளாக விடுவிக்கப்படும் என்று அவர் கூறினார்.

Union Cabinet approval to restore MPLADS funds

மேலும், நாடு இப்போது பொருளாதார மீட்சிக்கான பாதையில் சென்று கொண்டிருப்பதால் மீதமுள்ள 2021-22 ஆம் நிதி ஆண்டு முதல் வரும் 2025 - 26 ஆம் நிதி ஆண்டு வரை தொகுதி மேம்பாட்டு நிதியை தொடர்ந்து வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டில் இந்தியா முழுவதும் உள்ள 216 மாவட்டங்களில் நடத்தப்பட்ட மதிப்பீடு அடிப்படையில் நிதியை தொடர்ந்து வழங்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. மீதமுள்ள 2021- 22 ஆம் நிதியாண்டு முதல் 2025-26 ஆம் நிதி ஆண்டு முதல் வரை 17,417 கோடி ரூபாய் தொகுதி மேம்பாட்டு நிதிக்காக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. தொகுதி மேம்பாட்டுக்கான  5 கோடி ரூபாய் இரண்டு தவணைகளாக பிரித்து வழங்கப்படும் என்றும் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios