Asianet News Tamil

உலகில் மன்னிக்க முடியாத குற்றம்... எங்கிருந்து உங்களுக்கு இந்த துணிச்சல் வருகிறது..? ஆத்திரப்படும் அன்புமணி..!

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் எதிரிகளை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என பாமக ராஜ்யசபா எம்.பி அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
 

Unforgivable crime in the world ... where do you get this courage ..? question for Anbumani
Author
Tamil Nadu, First Published Jul 29, 2020, 1:05 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் எதிரிகளை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என பாமக ராஜ்யசபா எம்.பி அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர், ‘’உலகில் மன்னிக்கக் கூடாத குற்றம் ஒன்று உண்டென்றால், அது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தான். ஆனால், இந்தக் குற்றங்களைச் செய்தவர்கள் சாதாரண வழக்குகளில்  கைது செய்யப்படுவதும், கைது செய்யப்பட்ட சில காலங்களிலேயே மிகவும் எளிதாக பிணையில் விடுதலை செய்யப்படுவதும் அண்மைக்காலமாக அதிகரித்து விட்டது. இது அறத்திற்கு எதிரான நடவடிக்கையாகும்.

கந்தர்சஷ்டி கவசம் பாடலை கொச்சைப்படுத்தியும், தமிழ்க் கடவுள் முருகப் பெருமானை இழிவுபடுத்தியும், தமிழ் மக்களின் உணர்வுகளை புண்படுத்தியும் ஒரு காணொலி பதிவை வெளியிட்ட கருப்பர் கூட்டம் எனப்படும்  யூ-ட்யூப் இணையத் தொலைக்காட்சியின் நிர்வாகிகள் செந்தில்வாசன், சுரேந்திரன் ஆகிய இருவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். தமிழக அரசின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கதாகும்.

காவல்துறையினரின் இத்தகைய நடவடிக்கைகள் அனைத்து வகையான குற்றங்களுக்கு எதிராகவும் நீட்டிக்கப்பட வேண்டும். குறிப்பாக பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான குற்றங்களைச் செய்த  குற்றவாளிகள், இனியும் ஒரு முறை அத்தகைய இழிசெயலை செய்வது குறித்து நினைத்துக் கூட பார்க்கக் கூடாது என்னும் அளவுக்கு தண்டனைகள், சட்டத்திற்குட்பட்டு, கடுமையாக இருக்க வேண்டும். அந்த தண்டனைகள் குறித்த செய்திகளே அத்தகைய குற்றங்களை செய்யத் துணியாத அளவுக்கு அச்சத்தை ஏற்படுத்த வேண்டும். இத்தகைய கொடிய குற்றங்களைத் தடுப்பதற்கு அதைத் தவிர வேறு வழியில்லை.

ஆனால், அத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படாததால் தான் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான குற்றங்கள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளன. வேலூரை அடுத்த பாகாயத்தில் 10-ஆம் வகுப்பு மாணவியை, அவர் குளிக்கும் போது அப்பகுதியை சேர்ந்த சிலர் படம் எடுத்து தங்களின் பாலியல் தேவைகளுக்கு உடன்பட வேண்டும் என்று மிரட்டியதால் அந்த மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது, செய்யூர் அருகில் இளம்பெண் ஒருவர் திமுக நிர்வாகிகளால் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாக்கப்பட்டு மர்மமான முறையில் கொல்லப்பட்டது,  புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது, திருச்சி அருகே  14 வயது சிறுமி வீட்டிற்கு அருகில் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டது என இளம்பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவது மிகவும் கவலை அளிக்கிறது.

இந்தியா விடுதலை அடைந்து 73 ஆண்டுகளாகியும் பெண் குழந்தைகளால் சுதந்திரமாக நடமாட முடியவில்லை என்பது நாம் அனைவருமே வெட்கப்பட வேண்டிய உண்மையாகும்.  முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவர் 15 வயது சிறுமியை இரு ஆண்டுகளாக தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்திருக்கிறார் என்ற அதிர்ச்சியூட்டும் செய்தி இன்று வெளியாகியிருக்கிறது. இதற்கு முன் இன்னொரு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அவரது வீட்டில் வேலை செய்த 15 வயது சிறுமியை தொடர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்துள்ளார். அதற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ளார்.

கருணையுடன் பார்க்க வேண்டிய குழந்தைகளிடம் மிருகத்தனமாக நடந்து கொள்ளும் துணிச்சல் இவர்களுக்கு எப்படி வந்தது? சட்டத்தின் ஓட்டைகளில் இருந்து தப்பிவிடலாம் என்ற துணிச்சல் தானே இவர்களை இத்தகைய குற்றங்களை செய்ய வைத்தது? இந்த எண்ணத்தை உடனடியாக போக்க வேண்டும்.தில்லியில் நிர்பயா பாலியல் வன்கொடுமை மற்றும் படுகொலைக்குப் பிறகு தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்புக்காக 13 அம்சத் திட்டம் ஒன்றை அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். அதில், பாலியல்  குற்றங்களில் கைது செய்யப்படுபவர்களை வழக்கு விசாரணை முடிவடையும் வரையில் பிணையில் விடுதலை செய்யக்கூடாது, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும், வழக்கு விசாரணையை தினமும் நடத்தி விரைந்து தீர்ப்பளிக்கப்பட வேண்டும் ஆகியவை முக்கியமானவை ஆகும். 

ஆனால், அத்தகைய கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாததால் தான் பாலியல் குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட சில நாட்களில் பிணையில் வெளிவந்து சுதந்திரமாக நடமாடத் தொடங்குகின்றனர். குற்றவாளிகளாக இருந்தாலும் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. அதேநேரத்தில் பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களிடம் மனிதாபிமானம் காட்டத் தேவையில்லை; ஏனெனில் அவர்கள் மனிதர்களே இல்லை. பாலியல் குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடும் நிலையும், பெண்களும் குழந்தைகளும் சுதந்திரமாக நடமாட முடியாத நிலையும் நிலவுவது மாற்றப்பட வேண்டும். பாலியல் குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் அடைப்பது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பாலியல் வழக்குகளில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக எந்த வழக்கறிஞர்களும் ஆஜராகக் கூடாது.

அதன் மூலம் தமிழ்நாட்டை பெண்களும், குழந்தைகளும் ஒருதுளி கூட அச்சமின்றி சுதந்திரமாகவும், மகிழ்ச்சியாகவும் நடமாடும் பூமியாக மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios