தி.மு.க.,வின் இளைஞரணிச் செயலாளாராக நியமிக்கப்பட்டிருக்கிறார் உதயநிதி இதுவரை யாருமே அமராத மு.க.ஸ்டாலினின் இருக்கையில் அமர்ந்தார். 

1980-ல் கட்சிக்குள் மெதுவாகத் தனது மகன் ஸ்டாலினை அழைத்து வந்தார் கருணாநிதி. 1984-ல் ஸ்டாலினிடம் இளைஞர் அணிச் செயலாளர் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. பொதுவாகவே, கட்சியில் துணை அமைப்புகள் வெறும் ஒப்புக்கு மட்டுமேதான் இருக்கும். ஆனால், ஸ்டாலின் வந்த பிறகு இளைஞர் அணி, தலைமைக் கழகத்துக்கு இணையான அணியாக மாற்றப்பட்டது. 31 வயதில் மு.க.ஸ்டாலின் இளைஞரணி செயலாளர் ஆனார். 41 வயதில் உதயநிதி இளைஞரணி செயலாளராகி இருக்கிறார்.

 

அப்போது அறிவாலயம் கருணாநிதிக்கு என்றால், ஸ்டாலினுக்கு அன்பகம். இப்போது அறிவாலயம் மு.க.ஸ்டாலினுக்கு என்றால் உதயநிதிக்கு அன்பகம். 35 ஆண்டுகளாக இளைஞரணி செயலாளராக ஸ்டாலின் மட்டுமே இருந்தார். செயல் தலைவராக மாறியபோது வெள்ளக் கோயில் சுவாமி நாதன் இளைஞரணி செயலாளர் ஆனார். ஆனாலும் வெள்ளக்கோயில் சுவாமிநாதன் அன்பகத்தில் உள்ள மு.க.ஸ்டாலினின் இருக்கையில் அமரவில்லை. இப்போது இளைஞரணி செயலாளராக பொறுப்புக்கு வந்துள்ள உதயநிதி மு.க.ஸ்டாலின் அமந்த சீட்டில் உட்கார்த்திருக்கிறார். 

பதவியேற்ற மறுநாளே இளைஞரணியை கூட்டி ஆலோசனை நடத்தினார் உதயநிதி. அடுத்தடுத்த ஆட்டத்தை தொடங்கவும் இருக்கிறார். மாற்றுக் கட்சியில் அதிருப்தியாளர்களை திமுகவுக்கு இழுத்து வரும் முடிவிலும் இருக்கிறார் உதயநிதி. இளைஞரணி செயலாளர் ஆகிய பிறகு கட்சியில் தனக்கென ஒரு கூட்டத்தை உருவாக்கினார் மு.க.ஸ்டாலின். டி.ஆர்.பாலு, அன்பில் பொய்யாமொழி, பொன்முடி என அவரைச்சுற்றி ஒரு கூட்டத்தைக் கூட்டினார். இது அப்போதைய திமுகவினருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது. சிலர் இதனால் புறக்கணிக்கவும் பட்டனர்.

மு.க.ஸ்டாலின் நிழலில் ஒட்டிக் கொண்டவர்களின் வாரிசுகள் அவர்களது தந்தைகளைப்போலவே இப்போது உதயநிதியின் நண்பர்களாகி அவருடன் ஒட்டிக் கொண்டு வருகின்றனர். டி.ஆர்.பாலு மகன் டி.ஆர்.பி.ராஜா (எம்.எல்.ஏ) அன்பில் மொய்யாமொழி மகன் அன்பில் மகேஷ் மொய்யாமொழி,(எம்.எல்.ஏ), பொன்முடி மகன் கவுதமசிகாமணி (எம்.பி) என இவர்கள் அனைவரும் உதயநிதியின் நிழலாகத் தொடர்கின்றனர். இதனால் உள்ளூர் திமுக பிரதிநிதிகள் ஒதுக்கப்படலாம் என அச்சம் அக்கட்சிக்குள் நிலவுகிறது. உதயநிதியின்  ஆட்டத்தில் உண்மையான திமுகவினர் கரைசேர்வார்களா? என்பதே இப்போதைய கேள்வி..!