திருவாரூர் இடைத்தேர்தலில் உதயநிதி ஸ்டாலினுக்காக அவரது ரசிகர்கள் சீட்டு கேட்டு விண்ணப்பித்தது எதேச்சையானதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

திருவாரூர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட உடனே திமுக சார்பில் தேர்தலில் யார் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் யாராவது போட்டியிடக்கூடும் என்று பலவித ஊகங்கள் வெளியாயின. தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் விருப்ப மனு பெறப்பட்டபோது, யாரும் எதிர்பார்க்காத நிலையில் உதயநிதி ரசிகர்கள் என்ற பெயரில் உதயநிதி ஸ்டாலினுக்கு சீட்டு கேட்டு விருப்ப மனு அளித்தார்கள். அவர் பெயரில் அளித்த விருப்ப மனு சமூக ஊடங்களில் தீயாகப் பரவின. 

விருப்ப மனுவில் அளித்த தகவல்களின் அடிப்படையில் உதயநிதி பிறந்ததிலிருந்தே திமுக உறுப்பினரா என்ற கேள்வியோடு சமூக ஊடங்களில் அந்த விருப்ப மனுவை கடந்து விட்டார்கள். கடந்த காலத்தில் திமுகவில் நடிகர்கள், நடிகைகள் கட்சியில் இருந்தபோது, அவரது ரசிகர்கள் தேர்தலில் விருப்ப மனு அளித்ததுபோன்ற எந்த நிகழ்வும் நடந்ததாகத் தெரியவில்லை. ஆனால், இதற்கு மாறாக உதயநிதி ரசிகர்கள் சார்பில் சீட்டு கேட்டு விருப்ப மனு அளித்தது ஆச்சர்யத்தையே அளிக்கிறது. இந்த விஷயம் யதேச்சையாக நடந்ததுபோலத் தெரியவில்லை.

திமுகவில் உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து முன்னிலைப்படுத்தப்பட்டு வருகிறார். ஸ்டாலினுக்கு பிறகு உதயநிதி என்பதை கோடிட்டக்காட்டத் தொடங்கியுள்ளனர். உதயநிதியை முன்னிலைப்படுத்தப்படுவது சமூக ஊடங்களில்  தொடர்ந்து விமர்சிக்கப்பட்டுவருகிறது. உதயநிதியை ‘மூன்றாம் கலைஞர்’ என்று குறிப்பிட்டு ஒட்டிய போஸ்டர், சமூக ஊடகங்களில் கிண்டலுக்குள்ளானது. தஞ்சையில் கட்சி நிர்வாகிகள் உதயநிதியின் படத்தை அச்சிட்டு கூட்டம் நடத்தியதைச் சமூக ஊடங்களில் கண்டித்தபோது, ‘இனி இப்படி நடக்காது’ என்று கூறி அதற்காக மன்னிப்பு கோரினார் உதயநிதி ஸ்டாலின். 

இந்நிலையில் உதயநிதி, தேர்தலில் களமிறங்கினால், அது பொதுவெளியில் எப்படிப் பார்க்கப்படுகிறது என்பதை ஆழம் பார்ப்பதற்காக உதயநிதி பெயரில் விருப்ப மனு அளிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதற்கேற்றார்போல உதயநிதியின் ரசிகர்கள் சார்பில் விருப்ப மனு அளிக்கப்பட்டவுடன், உதயநிதி தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்றே பெரிய அளவில் ஊகங்கள் கிளம்பின. விருப்ப மனு அளித்தும் அவருக்கு சீட்டு கிடைக்காததைப் பற்றி யாரும் விவாதிக்கப்போவதில்லை. ஆனால், வருங்காலத்தில் தேர்தலில் அவர் போட்டியிடுவதற்கான தொடக்கப்புள்ளிதான் இந்த விருப்ப மனு அளித்த படலம் என்பதை மறுக்க முடியாது என்கிறார்கள் அரசியல் பார்வையாளார்கள். பூனைக்குட்டி வெளியே வரும்போது விஷயம் தெரியாமலா போகப்போகிறது.