தனது அத்தை கனிமொழி போட்டியிட உத்தேசித்துள்ள தூத்துக்குடி தொகுதியில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்ற நடிகரும் மு.க.ஸ்டாலின் மகனுமான உதயநிதியிடம் மக்கள் கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைத்தெடுத்தார்கள். 

தீவிர அரசியலில் இறங்க முடிவு செய்துவிட்ட உதயநிதி ஸ்டாலின், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதியில் உள்ள நாகலாபுரம் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்றார். தூத்துக்குடியிலும் விளாத்திக்குளத்திலும் நிலவும் பிரச்சினைகளைப் பற்றி உதயநிதி ஸ்டாலின் மக்களிடம் எடுத்து கூறினார். மக்கள் கேட்ட கேள்விகளுக்கும் உதயநிதி பொறுமையாகப் பதில் அளித்தார். ஆனால், அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற சிலர் உதயநிதியைத் தர்மசங்கடமாக்கும் கேள்விகளையும் முவைத்தார்கள். 

“இம்மானுவேல் சேகரன்  நினைவிடத்துக்கு அஞ்சலி செலுத்த திமுக மேல்மட்ட தலைவர்கள் வருவதில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தபிறகு இம்மானுவேல் சேகரனுக்கு அரசு விழா எடுப்போம் என டிடிவி தினகரன் ஏற்கனவே சொல்லியிருக்கிறார். இதை திமுக சொல்ல ஏன் தயக்கம்?” என்று ஒரு கல்லூரி மாணவர் கேள்வியை முன்வைத்தார்.  அதற்கு உதயநிதி, “ரோட்ல போற போக்குல யாரும் சொல்லிட்டு போகலாம். டிடிவி தினகரன் அப்படித்தான் சொல்லிட்டு போயிருக்கார். அதை அவரால் செயல்படுத்த முடியாது” என்று பேசிக்கொண்டிருந்தார். 

இடையில் புகுந்த எம்.எல்.ஏ கீதாஜீவன்,  “உங்கள் கோரிக்கையை தம்பி கட்சித் தலைமையிடம் நிச்சயம் கொண்டு செல்வார்" எனக் கூறி முடித்துவைத்தார். இதேபோல,  “தேவந்தேர குல வேளாளர் பிரிவில் உள்ள சாதிகளை ஒருங்கிணைத்து பெயர் மாற்றம் செய்ய திமுக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே? " என்ற கேள்வியை ஒரு மாணவர் கேட்டார். இதற்கு பதில் கூறிய உதயநிதி, “இந்தக் கோரிக்கை தொடர்பாக 2011-ம் ஆண்டில் முதல்வர் கருணாநிதி, நீதிபதி ஜனார்த்தனம் தலைமையில் குழு அமைத்தார். 

ஆனால், அந்த ஆண்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் உங்கள் கோரிக்கையை நிறைவேற்ற முடியவில்லை.  திமுக ஆட்சிக்கு வந்தபிறகு உங்கள் கோரிக்கையை நிச்சயம் பரிசீலிப்பார்கள்" என கூறினார். இதுபோன்ற கேள்விகள் கேட்கக்கூடும் என ஊகித்து, அந்தக் கேள்விகளுக்கு உதயநிதி பதில் தயாரித்து வந்திருந்தார் எனக் கூட்டத்தில் பங்கேற்ற திமுகவினர் கூறினார்கள். உதயநிதி ஸ்டாலின் அளித்த பதிலைக் கேட்டு திமுகவினர் பூரிப்பில் சந்தோஷத்தில் மிதந்தார்கள்.