திமுக இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, சென்னை சித்தரஞ்சன் சாலை இல்லத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தாய் துர்கா ஸ்டாலினிடம் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துப் பெற்றார். 

திமுக இளைஞரணி செயலாளராக பல ஆண்டுகளாக இருந்துவந்த மு.க.ஸ்டாலின், கட்சியின் செயல் தலைவரான பிறகு அந்தப் பதவியை துறந்தார். இதையடுத்து முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் நியமிக்கப்பட்டார். நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியை ஆதரித்து தமிழகம் முழுவதும் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். 

தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்ற பிறகு, உதயநிதிக்கு இளைஞரணி பதவியை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை திமுக நிர்வாகிகளை மத்தியில் எழுந்தது. இதுதொடர்பாக திமுக தலைமைக்கு தீர்மானங்களை நிறைவேற்றி அனுப்பிவைத்தார்கள். இந்நிலையில் உதயநிதி ஸ்டாலினை இளைஞரணி செயலாளராக அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 

உதயநிதி பொறுப்பேற்ற தகவல் அறிந்ததும் சட்டப்பேரவையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். திமுக அறிவாலயத்தில் தொண்டர்கள் மேள, தாளம் முழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்நிலையில், திமுக இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி, மு.க.ஸ்டாலினை சந்தித்து நேரில் வாழ்த்து பெற்றார்.