இதெல்லாம் பாஜகவுக்கு எதிரான போராட்டத்தை தடுக்காது... ராகுல் விவகாரத்தை சுட்டிக்காட்டி உதயநிதி டிவீட்!!
ராகுல்காந்தி எம்.பி பொறுப்பிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டதற்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ராகுல்காந்தி எம்.பி பொறுப்பிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டதற்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் கண்டனம் தெரிவித்துள்ளார். முன்னதாக கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலின்போது கர்நாடக மாநிலம், கோலாரில் நடந்த தேர்தல் பிரசார பேரணியில் ராகுல்காந்தி கலந்துக்கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், அனைத்து திருடர்களும் எப்படி மோடி என்ற குடும்ப பெயரை வைத்துள்ளனர் என்று தெரிவித்தார். அவரின் இந்த கருத்து சர்ச்சையானது. இதனிடையே ராகுலுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
இதையும் படிங்க: சட்டம் மற்றும் அரசியல் ரீதியாக எதிர்கொள்வோம்... ராகுல் தகுதி நீக்கம் விவகாரத்தில் காங்கிரஸ் கருத்து!!
இந்த வழக்கு சூரத் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் ராகுல் காந்தி குற்றவாளி என தீர்ப்பளித்ததோடு அவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டது. ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து மக்களவை எம்.பி பதவியிலிருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பறக்க தயாராகிவிட்டது பாஜக; பாஜக ஆட்சி அமையும் என்ற நம்பிக்கை மக்களிடம் வந்து விட்டது... அண்ணாமலை அதிரடி!!
இதுக்குறித்த அவரது டிவிட்டர் பதிவில், தேர்தல் பேச்சு தொடர்பாக பாஜகவினர் தொடர்ந்த அவதூறு வழக்கில், காங்கிரஸின் ராகுல்காந்தியை 2 ஆண்டுகள் சிறையென தீர்ப்பு வந்ததும், அவரை எம்.பி பொறுப்பிலிருந்து தகுதி நீக்கம் செய்துள்ள ஒன்றிய பாஜக அரசை வன்மையாக கண்டிக்கிறேன். இத்தகைய மிரட்டல்கள் பா.ஜ.க.வை எதிர்த்துப் போராடுவதைத் தடுக்காது. எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை பாசிஸ்ட்டுகளை அச்சமூட்டியுள்ளது. என்று தெரிவித்துள்ளார்.