முழு நேர அரசியல்வாதியாக செயல்பட உதயநிதிக்கு ஸ்டாலின் சுதந்திரம் கொடுத்துவிட்டதால் அவரது ரசிகர் மன்றங்களின் செயல்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளன.

தி.மு.கவில் மு.க.ஸ்டாலினின் வாரிசாக அடையாளம் காணப்பட்டிருப்பவர் உதயநிதி. இதனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும் கூட சமீப காலமாக அரங்கேறும் சம்பவங்கள் இதனை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் நூற்றுக்கணக்கான இடங்களில் உதயநிதிக்கு ரசிகர் மன்றங்கள் உருவாக்கப்பட்டன.  இது தொடர்பான தகவல்கள் சில ஊடகங்களில் எதிர்மறையாக வெளியாகின. இதனை தொடர்ந்து உதயநிதி ரசிகர் மன்ற விவகாரங்களில் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அன்பில் மகேசுக்கு ஸ்டாலின் உத்தரவு போட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதன் பிறகு உதயநிதிக்கு ரசிகர் மன்றங்கள் துவங்கும் பணிகளை அன்பில் மகேஷ் கிடப்பில் போட்டார். 

இந்த நிலையில் தி.மு.க சார்பில் நடைபெற்று வரும் கிராம சபை கூட்டத்தில் உதயநிதி பங்கேற்க பெரும் முயற்சி நடைபெற்றது. ஒரு வழியாக ஸ்டாலின் ஒப்புக் கொண்டதை தொடர்ந்து தேனியில் நடைபெற்ற ஊராட்சி சபை கூட்டத்தில் உதயநிதி பங்கேற்றார். இது தான் அவரது அரசியல் வாழ்வில் திருப்புமுனை என்று கூட கூறலாம். ஏனென்றால் இதுநாள் வரை உதயநிதி பங்கேற்ற அனைத்து நிகழ்ச்சிகளும் எதிர்மறை செய்திகளாகின.

 

ஆனால் தேனியில் ஊராட்சி சபை கூட்டத்தில் உதயநிதி பேசிய பேச்சுகள் அனைத்து ஊடகங்களாலும் நேர்மறையாக கையாளப்பட்டன. மேலும் மோடி முதல் எடப்பாடி வரை உதயநிதி பேசிய அரசியலும் லாஜிக்காக அமைந்துவிட்டன. இந்த தகவல் ஸ்டாலினை உற்சாகப்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து உதயநிதிக்கு மேலும் சில அசைன்மென்ட்களை ஸ்டாலின் தரப்பு கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. 

இதன் முதற்கட்டமாக இதுநாள் வரை நிறுத்தி வைத்திருந்த ரசிகர் மன்ற பணிகளை அன்பில் மகேஷ் தீவிரப்படுத்தி வருகிறார. முதற்கட்டமாக மதுரை மாவட்டத்தில் ஒரே நாளில் 51 ரசிகர் மன்றங்களை அன்பில் மகேஷ் ஞாயிறன்று திறந்து வைத்துள்ளார். இந்த நிகழ்விற்கு எப்போதும் இல்லாத வகையில் அன்பில் மகேஷே ஊடகங்களின் உயர் பொறுப்பில் உள்ளவர்களை தொடர்பு கொண்டு பேசி வருகிறார். 

மதுரையை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் உதயநிதி பெயரில் ரசிகர் மன்றங்கள் திறக்கப்பட உள்ளன. அதிலும் அனைத்து ஊராட்சிகளிலும் தலா ஒரு ரசிகர் மன்றம் இருக்க வேண்டும் என்கிற ரீதியில் பணிகள் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. தி.மு.க கிளை கழகங்களுக்கு சமமாக உதயநிதியின் ரசிகர் மன்றங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்கிற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் தி.மு.கவில் பொறுப்பில் உள்ளவர்களுக்கு ரசிகர் மன்றத்தில் பொறுப்பு கிடையாது என்று கூறப்படுகிறது. அதே சமயம் தி.மு.கவில் பொறுப்பில் உள்ளவர்களின் வாரிசுகள், குடும்பத்தினருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.