தேனி மாவட்டத்தில் நடைபெறவுள்ள ஊராட்சி சபைக் கூட்டத்தில் நடிகரும் மு.க. ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பதற்காக வெளியிடப்பட்ட செய்தியில் இளம் தலைவர் என்ற நாமத்தை உதயநிதிக்கு திமுகவினர் சூட்டியுள்ளனர்.

கடந்த ஓராண்டாகவே கட்சி நிகழ்ச்சிகளில் அதிகம் தலைகாட்ட தொடங்கியிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். திமுகவினரும் அவ்வப்போது உதயநிதிக்கு புகழ் பாடத் தொடங்கிவிட்டார்கள். சில மாதங்களுக்கு முன்பு திமுகவினர் சிலர், ‘மூன்றாம் கலைஞரே’ என்று  உதயநிதியை விளித்து ஒட்டிய போஸ்டர் பாரம்பரிய திமுகவினரை முகம் சுழிக்க வைத்தது. அந்த போஸ்டர் சமூக ஊடங்களிலும் வைரல் ஆனது. 

இதேபோல தஞ்சையில் நடந்த திமுக கட்சிக் கூட்டம் ஒன்றில்  உதயநிதியின் படத்தைப் பெரிதாக அச்சிட்டதும் சர்ச்சையைக் கிளப்பியது. இதை சமூக ஊடங்களில் வெளிப்படையாகப் பலரும் விமர்சித்தார்கள். தன் படத்தைப் போட்டு போஸ்டர் அடித்ததற்காக ட்விட்டரில் உதயநிதி ஸ்டாலின், ‘இனி இதுபோல நடக்காது’ என்று மன்னிப்பு கோரினார். திருவாரூர் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு, அங்கு உதயநிதி போட்டியிட வேண்டும் என அவரது பெயரில் விருப்ப மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

 

தற்போது திமுக சார்பில் ஊராட்சி சபைக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தக் கூட்டத்தில் திமுக கட்சி நிர்வாகிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் என பலரும் பங்கேற்று வருகிறார்கள். இந்நிலையில் தேனி மாவட்ட திமுக பொறுப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில், “தேனி ஆண்டிப்பட்டி ஒன்றியம் பிச்சம்பட்டி ஊராட்சியில் ஊராட்சி சபைக் கூட்டம் நடத்திட இளம்தலைவர் உதயநிதி ஸ்டாலின் வருகை தர உள்ளார். பிச்சம்பட்டி ஊராட்சி எல்லையான ஆண்டிப்பட்டி முருகன் தியேட்டர் அருகில் திமுக கொடியையும் ஏற்றி வைக்கிறார்” என்று தெரிவித்திருக்கிறார்.

 இதற்காக வெளியிடப்பட்ட செய்தியில், கம்பம் ராமகிருஷ்ணன் ‘இளம் தலைவர்’ என்று விளித்திருக்கிறார். ஏற்கனவே திமுகவில் எந்தப் பொறுப்பிலும் இல்லாத உதயநிதி ஸ்டாலின் முன்னிலைப்படுத்தப்படுவதாக  விமர்சனங்கள் இருந்துவருகின்றன.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்கும் கூட்டங்களில் எல்லாம் வாரிசு அரசியல் செய்கிறார்கள் என்ற பழைய பிரச்சாரத்தை கையில் எடுத்து பேசிவருகிறார். ‘இளம் தலைவர்’ என ராகுல் காந்தியை தமிழக காங்கிரஸார் விளித்து அழைப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். தற்போது அந்தப் பட்டத்தை உதயநிதியை அழைக்க திமுகவினர் பயன்படுத்த தொடங்கியிருக்கிறார்கள். ஆக, மு.க.ஸ்டாலினை விட புதிய புதிய நாமங்களை வழங்கி உதயநிதியை திமுக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.