நயன்தாராவை கட்டிப்பிடித்ததால் உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக இளைஞரணி பதவி வழங்கப்பட்டதா என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார். 

வேலூர் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து கே.வி.குப்பம் பகுதியில் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி வீதி வீதியாக பிரச்சாரம் செய்தார். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் இந்த ஆட்சியை கலைப்பதற்கு மு.க.ஸ்டாலின் எவ்வளவோ முயற்சி செய்தார். ஒன்றுமே வேலைக்கு ஆகவில்லை. மு.க.ஸ்டாலினுக்கு முதல்வராகும் ஜாதகப்பொருத்தம் கிடையாது. அனைத்து பொருத்தமும் எங்களது எடப்பாடியாருக்கு தான் உண்டு. 2021-ம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலிலும் பழனிச்சாமி தான் முதல்வர். ஸ்டாலின் போன்று எடப்பாடியார் ஆட்சியை பிடிக்கவில்லை. முதல்வர் பதவி எடப்பாடியாருக்கு தேடி வந்தது. திமுகவில் உழைப்பவர்களுக்குமரியாதை கிடையாது.  

அதிமுகவை நாங்கள் நினைத்தால் அரை விநாடியில் கலைத்து விடுவோம் என்று ஸ்டாலின் கூறுகின்றார். ஆட்சியைக் கலைப்பதற்கு. அதைப் பார்த்துக் கொண்டிருப்பதற்கு நாங்கள் என்ன குமாரசாமி என்று ஸ்டாலின் நினைத்துக் கொண்டிருக்கிறாரா?. எடப்பாடியார் நிழலை யாரும் நெருங்க நினைத்தால்கூட  அதிமுக தொண்டர்கள் தற்கொலைப்படையாக மாறுவார்கள். இனிமேல் சட்டமன்றத்திற்குள் திமுக எம்எல்ஏக்கள் டான்ஸ் ஆடிப் பார்க்கட்டும். உங்கள் தலையில் ஏறி நாங்கள் ஆடுவோம்.  

திமுகவினர் நாங்கள்தான் ரவுடி நாங்கள் தான் ரவுடி என்று கூறி வருகின்றனர். எங்களுக்கும் எல்லா வித்தைகளும் தெரியும். எங்களை திமுகவினர் மிரட்டி பார்க்க நினைத்தால் திமுகவினரின் அரசியலை நாங்கள் முடித்து வைப்போம். நாங்களெல்லாம் கில்லி என்று ஸ்டாலின் கூறி வருகிறார். நீங்கள் கில்லி ஒன்றும் கிடையாது வெறும் சுள்ளிதான். என்றுமே நாங்கள்தான் கில்லி. உங்களது வேலையை எங்களிடம் காட்டாதீர்கள். உங்களது நரித்தனமான வேலை எங்களிடம் பலிக்காது. எடப்பாடி கண்ணசைத்தால் திமுக கட்சிக்கு சாவு மணி அடித்து விடுவோம். எடப்பாடியார் நினைத்தால்தான்,  திமுக கட்சிக்கு வாழ்வு உண்டு. 

மேலும், உதயநிதிக்கு இளைஞர் அணி தலைவர் பதவி வழங்கப்பட்டது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர் 
நயன்தாராவை கட்டிப்பிடித்ததால் உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞரணி பதவி வழங்கப்பட்டதா. அப்படி என்றால் நயன்தாராவை கட்டிப்பிடித்தால் பொறுப்பு கொடுப்பீர்களா. அப்படி என்றால் நடிகர் பிரபுவுக்கும் பொறுப்பு கொடுக்க வேண்டும்.

திமுகவில் முழுக்க முழுக்க குடும்ப அரசியல் தழைத்தோங்கி உள்ளது. பிள்ளைக்காக உழைப்பவன் மனிதன் கிடையாது. நாட்டுக்காக உழைப்பவன் தலைவன். திமுக குடும்பம்,  பிள்ளைகளுக்காக அரசியல் நடத்துகிறது. எடப்பாடியார் நாட்டு மக்களுக்காக அரசியல் நடத்துகிறார் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.