சிவசேனாவை பறிகொடுத்த உத்தவ் தாக்கரே.. கொண்டாட்டத்தில் ஏக்நாத் ஷிண்டே - தேர்தல் ஆணையம் என்ன சொன்னது.?
சிவசேனா கட்சியின் பெயர், சின்னத்தை ஷிண்டே தரப்புக்கு வழங்கி தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்துக்கு 2019ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 288 சட்டசபை தொகுதிகளில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
பாஜக, சிவசேனா கூட்டணி அமைத்து போட்டியிட்ட நிலையில் பாஜக 105 இடங்களில் வெற்றி பெற்றது. சிவசேனா 55 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால் திடீரென சிவசேனா, பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது. இரண்டரை ஆண்டு முதல்வர் பதவியை சிவசேனா கேட்டதற்கு பாஜக மறுத்ததால் இந்த தேர்தல் கூட்டணி முறிந்தது.
பிறகு சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக இருந்தார். இரண்டரை ஆண்டு ஆட்சி நடந்தது. இந்நிலையில் தான் கடந்த ஆண்டு இந்த கூட்டணி ஆட்சிக்கு எதிராக சிவசேனாவின் 35க்கும் அதிகமான எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கினர்.
சிவசேனாவின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அணி திரண்டனர். இதனால் உத்தவ் தாக்கரே ஆட்சி கவிழ்ந்தது. ஆட்சி கவிழ்ப்புக்கு காரணமான ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிராவின் புதிய முதல்வராகவும் ஆனார். இருவரும் கட்சியின் பெயர் மற்றும் சின்னம் மீது உரிமைக் கோரி இந்திய தேர்தல் ஆணையத்தை அணுகினர்.
இதையும் படிங்க..தரக்குறைவான வார்த்தையை உச்சரித்த பிரபல நடிகர்.. அஜித் குமாரை கண்டிக்கும் தமிழக பாஜக - சர்ச்சையில் துணிவு!
அக்டோபர் 2022ல், தேர்தல் ஆணையம் ஒன்றுபட்ட சிவசேனாவின் வில் மற்றும் அம்பு சின்னத்தை முடக்கியது. இரு பிரிவுகளுக்கும் வெவ்வேறு பெயர்களையும், சின்னங்களையும் வழங்கியது. இந்த நிலையில் தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
அதன்படி, உண்மையான சிவசேனா என்பது மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணி தான் என்றும், சிவசேனா கட்சியின் வில் அம்பு சின்னத்தை ஏக்நாத் ஷிண்டேவிடம் வழங்க வேண்டும் என்றும் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இது ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு பெரிய வெற்றியாகும். தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவு உத்தவ் தாக்கரே அணியினருக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
இதையும் படிங்க..85 ஆண்டுகளாக நடந்து வரும் சமய மாநாட்டுக்கு தடையா.? இந்து சமய அறநிலையத்துறைக்கு எதிராக பொங்கிய அண்ணாமலை