நடிகரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதியை இளைஞரணி தலைவராக நியமிக்க வேண்டும் என்று திமுகவினர் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவுக்கு பிறகு கட்சி நிகழ்ச்சிகளில் அதிகமாக தலைகாட்டத் தொடங்கினார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனும் நடிகருமான உதயநிதி. கட்சி அறிவித்த கிராம சபைக் கூட்டங்களில் அதிகமாகப் பங்கேற்ற உதயநிதி, நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து திமுக கூட்டணிக்கு ஆதரவு திரட்டினார். அவர் நடிகராகவும் இருப்பதால், இயல்பாகவே அவரைக் காண கூட்டமும் கூடிவிடுகிறது. மு.க. ஸ்டாலினுக்கு பிறகு தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்தவர் என உதயநிதியை திமுகவினர் பாராட்டிவந்தனர்.


இந்நிலையில் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றதால், உதயநிதிக்கு ஆதரவான கருத்துகள் திமுகவில் அதிகம் எதிரொலிக்கத் தொடங்கியிருக்கிறது. அதற்கான முதல் பிள்ளையார் சுழியை திருச்சி திமுகவினர் போட்டுத் தொடங்கியிருக்கிறார்கள். திமுக இளைஞரணி தலைவராக உதயநிதி ஸ்டாலினை நியமிக்க வேண்டும் என்று அவர்கள் குரல் எழுப்பியிருக்கிறார்கள்.
திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் பல்வேறு விஷயங்களைக் குறிப்பிட்டு திமுகவினர் தீர்மானங்களை நிறைவேற்றினர். அதில், முக்கியமான தீர்மானமாக உதயநிதிக்கு பதவி வழங்க வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றினர்.  முன்னாள் அமைச்சர் நேரு தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், வெற்றிபயணத்தை தொடர்வதற்காகவும், திமுக இளைஞர் அணியை ஊக்குவிக்கும் வகையிலும் இளைஞர் அணி செயலாளர் பதவியை உதயநிதிக்கு  வழங்க வேண்டும் என்று திருச்சி வடக்கு, தெற்கு மாவட்ட திமுகவினர் சார்பில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
திருச்சி திமுகவை தொடர்ந்து இனி ஒவ்வொரு மாவட்டத்திலும் இதுபோன்ற தீர்மானங்கள் நிறைவேற்றி கட்சித் தலைமைக்கு அனுப்பபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கட்சி நிர்வாகிகளின் வேண்டுகோளுக்கு இணங்க கட்சி மேலிடம் உதயநிதி ஸ்டாலினை விரைவில் இளைஞராணி தலைவராக நியமிக்கும் என்றும் எதிர்பார்க்கலாம்.