மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கூறியதாவது: தமிழக முதல்வர் , துணை முதல்வர் அலங்காநல்லூர் ஜல்லிகட்டு போட்டியில் கலந்துகொண்டு அதிமுக சார்பில் முதல்வர் சார்பில் மாடுபிடி வீரருக்கு முதல் பரிசாக காரும், சிறந்த காளைக்கு துணை முதல்வர் ஓபிஎஸ் சார்பில் காரும் வழங்கப்படும். அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிகட்டு போட்டிக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. போட்டியை மாவட்ட நிர்வாகத்தோடு இணைந்து காவல்துறை, வருவாய், கால்நடை , சுகாதாரதுறையுடன் இணைந்து செயல்படுவார்கள்.

கொரோனா பரவல் தடுப்பு பணியாக பார்வையாளர்கள் இருக்கைகள் தனிமனித இடைவெளி விட்டு அமைக்க ஏற்பாடு செய்யப்படும். போட்டி முழுவதிலும் சிசிடிவி கேமிராக்கள் மூலம் கண்காணிப்பு செய்யப்படும். போட்டிகள் காலை 8மணிக்கு தொடங்கி மாலை 4மணி வரை மட்டுமே நடைபெறும். அலங்காநல்லூரில் 700 முதல் 800காளைகள் வரை பங்கேற்க வாய்ப்புள்ளது. பார்வையாளர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்த பின்னரே போட்டிகளை பார்வையிட அனுமதிக்கப்படும். 

 

கனமழை பெய்துவருவதால் போட்டிக்கான முன்னேற்பாட்டு பணிகளை பாதுகாப்புடன் விரைவுபடுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஜல்லிகட்டு போட்டியை காண வெளிநாட்டு பயணிகள் வருவது குறித்து விருப்பம் தெரிவித்தால் அவர்களுக்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்யும். வீரர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, பாதுகாப்பு கருதியும் மாலை 4மணிவரை போட்டி நடைபெறும். மாடுபிடி வீரர்கள் மாடுகளை பிடிக்கும் போது கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும்.

அதற்காக பயிற்சிகளை சுகாதாரதுறை வழங்கும். ஜல்லிகட்டு போட்டிகளில் வெற்றிபெறும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும்.  தொடர்மழையால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு உரிய விலை தர மாவட்ட நிர்வாகம் ஆய்வு மேற்கொள்ளும். மாசி, ஐப்பசி பிறந்தாலும் ஸ்டாலினுக்கு வழி பிறக்காது. பொங்கல் பரிசு தொகுப்பான 2,500 ரூபாய் வழங்கும் போது அதனை நேரில் பார்த்தோம். அம்மா அரசு உருவாக வேண்டும் என பொதுமக்கள் விரும்புகின்றனர்.

 

 

சட்ட ஒழுங்கு சிறப்பாக உள்ளது, அனைத்து சாலை வசதிகளும் சிறப்பாக உள்ளது. அடிமை அரசு நாங்கள் அல்ல தமிழகத்தில் 11மருத்துவகல்லூரிகளை பெற்றுள்ளோம் , மத்திய அரசுடனான நல்லுறவில் தான் உள்ளோம். நீட்தேர்வு குறித்து போராட்டம் நடத்திய நிலையில் முதல்வர் 7.5சதவித அரசு பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு வழங்கி ஏழைமாணவர்களுக்கான மருத்துவ கனவை நிறைவேற்றினார். நீர்மேலாண்மையில் சிறந்த நிர்வாகம் எடப்பாடி அரசு என அமித்ஷாவே கூறியிருக்கிறார்.

எதிர்கட்சி எங்கள் மீது சேற்றை வாரி வீசி அவதூறு பரப்புகிறது. கெடுவான் கேடு நினைப்பான் நாங்கள் நல்லவர்கள் சாதனையை கூறி வாக்கு கேட்போம். மன்னர் ஆட்சி போல திமுக செயல்படுகிறது உழைக்கும் தொண்டர்கள் கடைசி வரை உழைக்கவேண்டும் கருணாநிதி குடும்பத்தினர் மட்டுமே அதிகாரத்தில் மட்டுமே உள்ளனர். சாதாரண பொதுமக்கள் கூட எளிமையாக சந்திக்கும் முதல்வர் எடப்பாடியார். உதயநிதி தமிழக அரசியலின் கத்துக்குட்டி, மனநிலை பாதிக்கப்பட்ட நபர் போல உதயநிதி செயல்படுகிறார். 

உதயநிதி நாட்டிற்கு என்ன செய்தார். அவர் பேசுவதை எல்லாம் ஊடகங்கள் பெரிதுபடுத்த வேண்டும். உதயநிதியும் திமுகவும் உத்தம்புத்திரர்களா? திமுகவின் குடும்ப வரலாற்றை சொன்னால் சந்தி சிரித்துவிடும். அரசியலை சாக்கடையாக மாற்றியது திமுக தான். உதயநிதியின் பேச்சை எந்த மக்களும்  கேட்கவில்லை. உதயநிதி செல்ப் எடுக்காது. நாட்டுநடப்பே தெரியாத உதயநிதி பேசுவதற்கு தகுதியற்றவர். நோட்டுபுத்தகம், சத்துணவு குறித்தும் தெரியாத உதயநிதி மன்னர் போல வாழ்ந்துவருகிறார் அவருக்கு என்ன அரசியல் தெரியும். 21ஆம் புலிகேசி போல உதயநிதி செயல்படுகிறார், என்றார்.