‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ எனும் தலைப்பில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 100 நாட்கள் தேர்தல் பிரசாரத்தை முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி பிறந்த சொந்த ஊரான திருக்குவளையில் தொடங்கினார். பிரசாரம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே உதயநிதி ஸ்டாலின் கைதானார். கொரோனா விதிமுறைகளை பின்பற்றவில்லை என்று கூறி போலீஸார் கைது செய்தனர். பின்னர் உதயநிதி விடுவிக்கப்பட்டார். 
இந்நிலையில் தன்னை கைது செய்தாலும் பிரசாரம் தொடரும் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “பிரச்சார பயணத்தின் முதல் நாளிலேயே கிடைத்த எழுச்சி பொறுக்காமல் அடிமை அதிமுக அரசு என்னை கைது செய்தது. எனது கைதிற்கு எதிரான தமிழக மக்களின் கொந்தளிபப்புக்கு அஞ்சி தற்போது விடுவித்துள்ளது. எனது பிரச்சார பயணத்தை திட்டமிட்டபடி தொடர்கிறேன்; தொடர்வேன்.
எல்லா உரிமைகளையும் அடகு வைத்து தமிழகத்தை பாழ்படுத்திய அடிமைகளை விரட்டவே #விடியலை_நோக்கி_ஸ்டாலினின்_குரல் பிரச்சார பயணம். எந்த தடை வந்தாலும் தமிழகம் மீட்கும் இப்பயணம் தொடரும்” என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.