அன்பகத்தில் அதிரடி கிளப்பிய உதயநிதி..! போட்றா மீட்டிங்க .. சரசரவென ஓடோடி வந்த நிர்வாகிகள்..! 

திமுக இளைஞரணி செயலாளாராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்து இருந்தார்.

திமுக இளைஞரணி செயலாளராக பல ஆண்டுகளாக இருந்துவந்த மு.க.ஸ்டாலின், கட்சியின் செயல் தலைவரான பிறகு அந்தப் பதவியை துறந்தார். இதையடுத்து முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் நியமிக்கப்பட்டார். நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியை ஆதரித்து தமிழகம் முழுவதும் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். 

தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்ற பிறகு, உதயநிதிக்கு இளைஞரணி பதவியை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை திமுக முன்னணியினர் வைக்கத் தொடங்கினர்.திருச்சி, நாமக்கல் மாவட்ட திமுகவினர் இதுதொடர்பாக திமுக தலைமைக்கு தீர்மானங்களை நிறைவேற்றி அனுப்பிவைத்தார்கள். இந்நிலையில் உதயநிதி ஸ்டாலினை இளைஞரணி செயலாளராக அக்கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தார்.

திமுக இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்ற பின், உதயநிதி ஸ்டாலின் சென்னை அன்பகத்தில் திமுக இளைஞரணி செயலாளர் ஆலோசனை கூட்டத்தை தற்போது நடத்தி வருகிறார். இந்த கூட்டத்தில் 150 நிர்வாகிகள் கலந்துகொண்டு உள்ளனர். இளைஞரணி செயல்பாடுகளை வேகப்படுத்துவது, புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, இளைஞரணி சார்பாக கூட்டங்களை நடத்துவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.

ஒரு நடிகராக மட்டுமே அறியப்பட்ட உதயநிதி ஸ்டாலின், தற்போது ஒரு அரசியல் வாதியாக அதுவும் அதிகாரம் மிக்க பதவியில் உள்ளார். பொறுப்பேற்ற 3 நாட்களிலேயே கூட்டத்தை கூட்டி அதிரடி காட்டி காட்டி வருகிறார் உதயநிதி ஸ்டாலின். உதயநிதி ஸ்டாலினின் அனைத்து நடவடிக்கையிலும் அவருடைய உற்ற நண்பரான அன்பில் மகேஷ் பொய்யாமொழி உடன்  இருக்கிறார்.