திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன் உள்ளிட்டோரை கேலியாகச் சித்தரித்து கோவையில் போஸ்டர் ஒட்டப்பட்டது. இந்த போஸ்டர்களை கிழித்தெறிந்த 12 திமுகவினரை போலீஸார் கைது செய்தனர். போலீஸின் இந்த நடவடிகையைக் கண்டித்து திமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் இளைஞரணி செயலாளர் உதய நிதி ஸ்டாலின் கலந்துகொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், “இது வெறும் போஸ்டர் ஒட்டியதற்காக நடத்தப்படும் போராட்டம் கிடையாது. கோவையில் வேலுமணி அடிக்காத கொள்ளையே கிடையாது. தேர்தலில் மக்கள் சாவு மணி அடிக்கப் போகிறார்கள். துரத்தி அடிக்கப்போகின்றனர். பெயரை போட்டுக்கூட போஸ்டர் அடிக்க தைரியமில்லாத ஒரு அமைச்சர் வேலுமணி. இதை விட அசிங்கமாக சிறப்பாக எங்களுக்கும் போஸ்டர் அடிக்க தெரியும். டேபிளுக்கு அடியில் ஊர்ந்து சென்று பதவியைப் பிடித்தவர்தான் எடப்பாடி பழனிச்சாமி. இன்னும் தேர்தலுக்கு 6 மாதங்கள்தான் இருக்கு என்பதை காவல் துறையினர் உணர வேண்டும். 
தமிழகத்தில் யார் முதல்வர் என்றே தெரியவில்லை. நிழல் முதல்வராக எஸ்.பி.வேலுமணி இருக்கிறார். கொரொனாவை வென்றெடுத்த நாயகனே என்று போஸ்டர் ஓட்டியதில் இருந்து கோவையில் நோய் அதிகரித்துள்ளது. அவர் வேலுமணி அல்ல ஊழல் மணி. பிளிச்சிங் பவுடர் முதல் மாஸ்க் வரை அனைத்திலும் ஊழல் நடந்துள்ளது. 7 நிறுவனங்கள் வைத்து அவற்றில் மாறி மாறி டெண்டர் எடுத்து கொள்ளையடித்து இருக்கிறார்கள். ரூ. 1,300 மதிப்புள்ள பல்பை 6,000 ரூபாய்க்கு வாங்கி இருக்கிறார்கள். ஊழல் செய்தற்கான அனைத்து ஆதாரங்களும் மு.க.ஸ்டாலினிடம் உள்ளன. ஆட்சி மாறியவுடன் அனைவரும் உள்ளே போகப்போகிறார்கள்.” என்று உதயநிதி ஸ்டாலின் பேசினார்.