அன்று உதயநிதிக்கு புதிய பதவி கொடுப்பது குறித்து முதல்வர் முடிவு எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறார்கள் சில முக்கிய அமைச்சர்கள். ஆனால், உதயநிதியோ..

திமுகவை பொறுத்தவரை கட்சியிலும், ஆட்சியிலும் ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக உதயநிதியை கொண்டு வர வேண்டும் என்று முடிவோடு இருக்கிறார்களாம் அவரது குடும்ப உறுப்பினர்கள். அதன் வெளிப்பாடுதான் அமைச்சர் அன்பில் மகேஷ் மூலம் முதன் முதலில் வெளியானது. அதன் பிறகு மற்றவர்களும் அதை முன்மொழிய, வழிமொழிய இறுதியில் திமுகவின் கட்டமைப்பில் குடும்ப ஆட்சி என அவ்வப்போது விமர்சனம் செய்யும் பாஜகவின் எச்.ராஜா கூட உதய நிதி அமைச்சராவதும், துணை முதல்வராக நியமனம் செய்வதும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் விருப்பம் இதில் எங்களுக்கு என்ன இருக்கிறது..?’’ என்று கூறும் அளவுக்கு விஷயம் சென்று விட்டது.

இந்த ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் வருகிற ஐந்தாம் தேதி கூட இருக்கிறது. அன்று உதயநிதிக்கு புதிய பதவி கொடுப்பது குறித்து முதல்வர் முடிவு எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறார்கள் சில முக்கிய அமைச்சர்கள். ஆனால், உதயநிதியோ, ‘’கட்சியை இன்னும் பலப்படுத்துவது தான் இப்போதைக்கு முக்கிய வேலை. அதனால் எனக்கு வேறு எந்த பதவியும் வேண்டாம்’’ எனச் சொல்லிவிட்டாராம்.

மு.க.அழகிரியை பற்றியும் இப்போது தென் மாவட்டங்களில் அதிகமாகப்பேச்சு வெளிவந்து கொண்டிருக்கிறது. அவரை கட்சிக்கு உள்ளே கொண்டுவர வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதே நேரத்தில் ஆரம்பத்தில் ஸ்டாலினை கடுமையாக விமர்சனம் செய்த அழகிரி, சட்டமன்ற தேர்தலின்போது ரொம்பவே அமைதியாகி விட்டார். அதோடு ’மனசுல எதையும் வைக்காமல் எல்லோரும் வேலையை பாருங்கப்பா’’ என்று அவர் சொன்னதாக ஒரு தகவல் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதனால் ஸ்டாலின் ரெம்பவே மகிழ்ந்து போனாராம்.

 அழகிரி மீது இயற்கையாகவே ஸ்டாலினுக்கு பாசம் அதிகம் என்கிறார்கள். ஆனாலும் சில குடும்ப உறுப்பினர்களின் எதிர்ப்பு காரணமாக மு.க.ஸ்டாலினால், அழகிரி விஷயத்தில் எந்த முடிவும் எடுக்க முடியவில்லை. அதனை அழகிரியும் புரிந்து கொண்டதாகக் கூறுகிறார்கள். அதே நேரத்தில் இத்தனை ஆண்டுகளாக தன்னை நம்பியிருக்கும் தனது ஆதரவாளர்களை கட்சியில் மீண்டும் சேர்த்து அவர்களுக்கு உரிய முக்கியத்துவம் கிடைக்க செய்ய வேண்டும் என மு.க.அழகிரி விரும்புவதாக கூறுகிறார்கள்.

இதுதொடர்பாக மு.க.அழகிரிக்கு மிக நெருங்கிய நண்பரும், சபரீசனுக்கு நன்கு அறிமுகமானவரான ஒரு தொழிலதிபரிடம் விஷயத்தை கூறி இருக்கிறார். அதன் பிறகு செல்வி உட்பட குடும்ப உறவுகள் கூடி அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கு ஏதாவது பதவி தரலாம் என பேசி இருக்கிறார்கள். அழகிரியின் ஆதரவாளர்களுக்கு முதலில் பதவி கொடுங்கள் எனக் கேட்டுக் கொண்டிருக்கிறாராம். இதுவரை அழகிரியும், ஸ்டாலினும் நேரடியாக சந்தித்து பேசிக் கொள்ளாவிட்டாலும் இது சம்பந்தமாக சுமார் 7 முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இருக்கிறது என்கிறார்கள் மதுரை திமுக பிரமுகர்கள்.

 அதன் வெளிப்பாடுதான் சமீபத்தில் கன்னியாகுமரிக்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், அழகிரியின் தீவிர ஆதரவாளரான மன்னனை சந்தித்து பேசியிருக்கிறார். அதன் பிறகு மதுரையில் இருந்து சென்னைக்கு வந்து இரண்டாவது முறையாக ஸ்டாலினை சந்தித்து விட்டுச் சென்றிருக்கிறார் பி.எம்.மன்னன். தற்போதைக்கு மன ரீதியாக இது துருவங்களும் இணைந்தது, மறைந்த முதல்வர் கருணாநிதியின் குடும்பத்தாருக்கு பரம நிறைவை தந்துள்ளது. விரைவில் மு.க.அழகிரியும், ஸ்டாலினும் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ண இருப்பதாக கூறப்படுகிறது.

ஆட்சியில் இருந்தாலும் வாக்கு ரீதியாக பல இடங்களில் திமுக பலவீமனாக இருக்கிறது. உள்ளாட்சித் தேர்தல், அடுத்து பாராளுமன்றத் தேர்தல் என அடுத்தடுத்த தேர்தல்களில் தமிழகத்தில் தன்னுடைய வளர்ச்சிக்காக எந்த அளவுக்கும் செல்ல தயாராகவே இருக்கிறது பாஜக. குறிப்பாக தென் மண்டலத்தில் அதிவேகமாக காலூன்றி வரும் நிலையில் அதற்கு ஏற்ப முடிவு செய்து கட்சியை கட்டுக்குலையாமல் வைக்க வேண்டிய பொறுப்பு ஸ்டாலினுக்கு உள்ளது. எனவே அழகிரிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்பதை மு.க.ஸ்டாலின் உணர்ந்து விட்டதாக கூறுகிறார்கள்.