திமுக இளைஞர் அணித் தலைவராக பொறுப்பேற்ற பிறகு வந்த முதல் பிறந்த நாளை மிகவும் அடக்க ஒடுக்கமாக கொண்டாடி நல்ல பேர் எடுத்துச் சென்றுள்ளார் உதயநிதி.

திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதியின் பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. திமுகவின் அடுத்த வாரிசு என்பதோடு தற்போதைய அதிகார மையம் வேறு என்பதால் திமுக மாவட்டச் செயலாளர்கள் முதல் வார்டு செயலாளர்கள் வரை உதயநிதியை இன்று பார்த்துவிடும் முடிவில் இருந்தனர். அதோடு மட்டும் அல்லாமல் மாவட்டந்தோறும் தடல் புடல் கொண்டாட்டங்களுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இந்த ஏற்பாடுகளின் அடிப்படையில் பொதுக்கூட்டங்கள், கலை நிகழ்ச்சிகள், நலத்திட்ட உதவிகள் என ஏராளமான கோரிக்கைகளுடன் திமுக தலைமையை மாவட்டத்தில் இருந்து உடன்பிறப்புகள் அணுகியிருந்தனர். ஆனால் அத்தனைக்கும் திமுக தலைமை தடை போட்டுவிட்டது. உதயநிதி பிறந்த நாளை பிரமாண்டமாக கொண்டாடக்கூடாது என்று தலைமை நிர்வாகிகளை கேட்டுக் கொண்டது. அதே சமயம் உதயநிதி பிறந்த நாளன்று அன்பகத்தில் நிர்வாகிகளை சந்திப்பார் அங்கு வந்து வாழ்த்து தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது.'

இதனால் பிறந்த நாளன்று உதயநிதியை சந்திக்க தமிழகத்தின் தென்கோடி மாவட்டங்களில் இருந்தும் உடன்பிறப்புகள் சென்னை நோக்கி புறப்பட தயாராகினர். ஆனால் திடீரென நேற்று இரவு நிர்வாகிகளுக்கு தலைமையிடம் இருந்து அவசர தகவல் சென்றது. உதயநிதியை பிறந்த நாளன்று யாரும் டிஸ்டர்ப் செய்ய வேண்டாம் என்பது தான் அந்த தகவல். திமுக நிர்வாகிகள் மட்டும் அல்லாமல் உதயநிதி ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கும் தடை போடப்பட்டது.

இந்த நிலையில் பிறந்த நாளன்று அதிகாலையிலேயே தனது தாத்தா சமாதிக்கு சென்ற உதயநிதி அங்கு அஞ்சலி செலுத்திவிட்டு பின்னர் அண்ணா, பெரியார் நினைவிடங்களுக்கு சென்று திரும்பினார். அண்ணா அறிவாலயத்தில் தந்தை ஸ்டாலினிடம் ஆசி பெற்ற உதயநிதி அன்பகத்தில் சென்னை நிர்வாகிகளை மட்டும் சந்தித்து வாழ்த்துகளை பெற்றுவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். உதயநிதியை பார்க்க பெரும் அளவில் நிர்வாகிகள் வருவதை அறிந்து இந்த நேரத்தில் இப்படி ஒரு ஆரபாட்டம் வேண்டாம் என்று ஸ்டாலின் கூறியதால் கடைசி நேரத்தில் நிர்வாகிகளுக்கு தடை போடப்பட்டதாக சொல்கிறார்கள்.

அதே சமயம் உதயநிதியும் கூட தற்போது தன்னுடைய பெயர் பெரிய அளவில் எந்த விஷயத்திலும் அடிபட விரும்பவில்லை என்கிறார்கள். இதனால் அவரே விரும்பித்தான் பிறந்த நாளை எளிமையாக கொண்டாடி நல்ல பேர் வாங்கிவிட்டதாகவும் பேசிக் கொள்கிறார்கள்.