குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று பேரணி நடந்தது. இதில் திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் பங்கேற்றனர். எழும்பூரில் உள்ள தாளமுத்துநடராசன் மாளிகை அருகில் இருந்து ராஜரத்தினம் ஸ்டேடியம் வரையில் இந்த பேரணி நடந்தது.

இதில் நாராயணப்பா என்ற 85 வயது திமுக தொண்டர் கலந்துக் கொண்டார். சுவாரஸ்யமான விஷயம் என்னவெனில் இந்த போராட்டத்திற்காக அவர் ஓசூரில் இருந்து வந்திருக்கிறார். இந்த வயதிலும் போராட்டத்திற்காக வந்திருக்கிறீர்களே என கேட்டதற்கு, கலைஞருக்காக என் உயிரையும் கொடுப்பேன் என்றார் அவர். இந்த பேரணி எதுக்கு தெரியுமா என்றதற்கு, ”ஈழத்தமிழர்கள், முஸ்லிம்கள், சிறுபான்மையினருக்கு அநீதி இழைக்கிறாங்க, அத எதிர்த்து தான்” என்றார்.

அந்த பெரியவர் பேசிய வீடியோ நேற்று இணையத்தில் வைரலானது. இதைத் தொடர்ந்து, திமுக-வின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், ”ஓசூர் சமத்துவபுரத்தை சேர்ந்த நாராயணப்பா என்ற 85 வயது பெரியவர், ‘கலைஞருக்காக, தலைவருக்காக வந்தேன்’என்கிறார். மக்களுக்கான போராட்டம் என்பது வன்முறையல்ல என்பதை உணர்ந்த, தாத்தா நாராயணப்பா போன்ற தைரியமான பெரியவர்கள்தான் எங்களை வழிநடத்துகிறார்கள்’’என்று தனது ட்விட்டரில் பதிவிட்டு, அந்த பெரியவரின் வீடியோவையும் இணைத்திருக்கிறார்.

இந்நிலையில் மீண்டும் அந்தப்பெரியவரை அழைத்து பேசிய உதயநிதி அது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், 'உங்க எல்லா படங்களையும்  பார்த்துடுவேன். நீங்க மேயர் எலெக்‌ஷன்ல நிக்கும்போது நாந்தான் இங்கவந்து உங்களுக்காக வேலை செய்வேன். 'நான்  மேயரால்லாம் வரமாட்டேன்'னு பேப்பர்ல சொல்லாதீங்க' என்று  செல்லமாகக் கோபப்பட்டவர், 'அடுத்தமுறை வரும்போது கர்நாடகா அவரைக்காய் எடுத்துட்டு வர்றேன்' என்றார்.

'எல்லா போராட்டங்கள்லயும் கலந்துப்பேன். இப்பக்கூட உனக்கு தில்லு இருந்தா என் மேல வழக்கு போடுனு சொல்லிட்டேன்' என்றவரிடம், 'உங்களுக்கு என்னங்கய்யா வேணும்' என்றேன். 'ஓசூர் போனதும் சொல்றேன்: என்றபடி  என் கைகளை இறுகப் பற்றிக்கொண்டார்.  இந்த பிணைப்புதான் திமுக’’ எனப்பதிவிட்டுள்ளார்.