சசிகலாவை  முதலமைச்சராக்க வேண்டும் என கூறிய உதயக்குமார் இன்று எடப்பாடி அணியில் இருக்கிறார் எனவும் மாறி மாறி பேசக்கூடியவர் உதயக்குமார் எனவும் டிடிவி ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். 

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், அப்போது சசிகலா குடும்பம் குறித்து மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பேசிய 2 குறுந்தகடுகளை வெளியிட்டார்.

இதைத் தொடர்ந்து பேசிய அவர், ஜெயலலிதாவால் ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள், தற்போது கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்ற நினைப்பதாக தெரிவித்தார்.

ஆனால் குழப்பம் விளைவிக்க நினைப்பவர்களை மக்கள் கண்டிப்பாக  ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றும் ஜெயலலிதா அரசுதான் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றும் அவர்கள் விரும்புவதாகவும் அவர் கூறினார்.

தற்போதைய சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமிதான் உண்மையான அதிமுக தொண்டன் என்றும், அனைவரையும் அரவணைத்துச் செல்லும் தகுதி எடப்பாடிக்குத்தான்  உண்டு என்றும் உதயகுமார் தெரிவித்தார்.

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ தங்க தமிழ்ச்செல்வன், சசிகலாவை முதலமைச்சராக்க வேண்டும் என கூறிய உதயக்குமார் இன்று எடப்பாடி அணியில் இருக்கிறார் எனவும் மாறி மாறி பேசக்கூடியவர் உதயக்குமார் எனவும் தெரிவித்தார். 

எடப்பாடி கூட்டும் பொதுக்குழு மற்றும் செயற்குழு எங்களை கட்டுப்படுத்தாது எனவும், தங்க தமிழ்ச்செல்வன் குறிப்பிட்டார்.