ஈரோடு மக்களவை தொகுதியில் தனிச்சின்னத்திற்கு பதிலாக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மதிமுக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக இடம் பெற்றுள்ளது. ஈரோடு மக்களவைத் தொகுதியையும், ஒரு மாநிலங்களவை இடத்தையும் மதிமுகவுக்கு திமுக ஒதுக்கியுள்ளது. ஈரோடு தொகுதியில் அக்கட்சியின் பொருளாளர் அ.கணேசமூர்த்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

 

இந்நிலையில், மதிமுகவின் சின்னமான பம்பரம் சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வேறு சின்னம் தான் ஒதுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால் மதிமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என திமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் இந்த கருத்தினை மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும், அக்கட்சியின் பொருளாளரும், வேட்பாளருமான கணேசமூர்த்தியும் ஏற்கவில்லை. தேர்தல் ஆணையம் ஒதுக்கும் சுயேச்சை சின்னத்தில் கணேசமூர்த்தி போட்டியிடுவார் என வைகோ தெரிவித்திருந்தார். வருகிற 25-ம் தேதி  கணேசமூர்த்தி வேட்புமனுத்தாக்கல் செய்வார் என்றும் தெரிவித்திருந்தார். 

இதுதொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் வைகோ ஆலோசனை நடத்தினார். அப்போது சுயேட்சை சின்னத்தில் போட்டியிட்டால் அது அதிமுகவிற்கு சாதகமாக அமைந்திடும் என்று கருத்து தெரிவித்தனர். மேலும் மக்களவை தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிலாம் என்று மதிமுக கட்சி நிர்வாகிகள் கூறினர்.

 

இந்நிலையில் வெற்றிதான் முக்கியம் என்ற நிலையில் ஈரோட்டில் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் நிற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உதயசூரியன் சின்னத்தில் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி நிற்பதால் ஆளும் அதிமுக கட்சி கலக்கத்தில் உள்ளது.