ஒரு அமைச்சரால் இப்படியெல்லாம் கூட பேசமுடியுமா? என்று தமிழகத்தை தெறிக்கவிட்டுக் கொண்டிருக்கிறார் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி. எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினில் துவங்கி, காங்கிரஸ் வரையில் தூக்கிப்போட்டு மிதிப்பேன், அழிச்சிடுவோம், ஜாக்கிரதையா இருந்துக்கோங்க, துப்பாக்கிய எடுத்து சுடுங்க! என்று தாறுமாறாக விமர்சித்துக் கொட்டிக்  கொண்டிருக்கிறார் மனிதர். 

மீடியாவின் மைக்கை கண்டாலோ, மேடையில் மைக்கை கண்டாலோ கன்னாபின்னாவென இவர் தட்டும் பேட்டிகள் பத்தாது என்று இவரது பேச்சுக்களின் வீடியோ கிளிப்பிங்ஸை சமூக வலைதளங்களில் வெளியிட்டு, இவரை போற்றிக் கொண்டாட ஒரு குரூபே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது தெரியுமா? ‘கே.டி.ஆர். ஆர்மி’  எனும் பெயரில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு ஆதரவாக ஒரு இணையதள பக்கம் இயங்கி வருகிறது. இதை நிர்வகிப்பவர் கே.சி.பிரபாத்.  இந்த ஆர்மியைப் பற்றிப் பேசும் பிரபாத் “நானெல்லாம் அமைச்சரோட தீவிர ரசிகன். ஏதோ இன்னைக்கு இல்ல, அவர் மாவட்ட இளைஞரணி செயலாளராக இருக்குற காலத்துல இருந்தே ரசிகனா இருக்கேம். அப்போ இருந்தே சோஷியல் மீடியாவுல அவருக்கு ஆதரவா எழுதிட்டேஇருக்கேம். 

இப்போ காலத்துக்கு ஏத்தா மாதிரி எங்களோட பக்கத்தை ‘கே.டி.ஆர். ஆர்மி’ எனும் பெயரில் மாற்றியிருக்கிறோம். ஒரு வாரத்துக்குள்ளேயே பத்தாயிரம் பேர் இதை விரும்பியிருக்காங்க. இணையதளங்களில் இளைஞர்கள்தான் அதிகமா இயங்குறாங்க. ஆக இந்த பத்தாயிரத்தில் முக்கால்வாசி சதவீதத்துக்கும் மேல் இளைஞர்களாகதான் இருக்கிறாங்க. ஆக இளைஞர்களின் விடிவெள்ளி நம்ம அமைச்சர் ராஜேந்திரபாலாஜிதான் அப்படிங்கிறது உறுதியாகியிருக்குது. 

கருத்துச் சுதந்திரத்தை முறையாக பயன்படுத்துவது அமைச்சர் ராஜேந்திரபாலாஜிதான். அமெரிக்காவுக்கு சமீபத்தில் மோடி சென்றிருந்தபோது, அவரை ‘இந்தியாவின் தந்தை’ என டிரம்ப் அழைத்தார். இதைத்தான் எங்கள் அமைச்சர் அன்றே ‘டாடி’ என்றழைத்துவிட்டார். ஆக டிரம்புக்கே இந்த பாயிண்ட் டை எடுத்துக் கொடுத்து பாடம் சொன்னவராகிவிட்டார். 

கே.டி.ஆர். ஆர்மி சமூகவலைதல பகுதியில் அமைச்சரின் அன்றாட நிகழ்வுகளையெல்லாம் பகிர்கிறோம், அவரது பேச்சுக்களின் வீடியோவுக்கு ஏகப்பட்ட லைக்ஸ் விழுகிறது.” என்கிறார். ஆனால் எதிர்க்கட்சிகளோ ‘ராஜேந்திரபாலாஜியின் பேச்சுக்களையும், செயல்களையும் அவர்களின் கட்சியினரே கோமாளித்தனமாகத்தான் பார்க்கிறார்கள். ‘ என்று போட்டுத் தாக்குகிறார்கள்.