ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பின் சசிகலா அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக அரிதாரம் பூசி, அவதாரம் எடுத்த போது முன்வரிசையில் நின்று, மூச்சு முட்ட வாழ்க கோஷம் போட்டவர் பெங்களூரு புகழேந்தி. சசி சிறை சென்ற பின், அவரது அக்கா மகனான தினகரனின் நிழலாகவே மாறிப்போனார் புகழேந்தி. 
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து கொண்டு ஆளும் இ.பி.எஸ். அரசுக்கு எதிராக புகழேந்தி கொந்தளித்த, கொப்பளித்த, உப்புக்கரித்த வார்த்தைகள் இன்னமும் வீடியோக்களில் வெறித்தனமாக வலம் வரத்தான் செய்கின்றன. ஆனால் அவற்றையெல்லாம் தூக்கி அக்கட கடாசிவிட்டு, இதோ சில மாதங்களுக்கு முன் தினகரனுக்கு எதிராக உள் யுத்தத்தை துவக்கிய புகழேந்தி, சில வாரங்களுக்கு முன்பாக அ.தி.மு.க.வில் இணைந்தேவிட்டார். 

அப்போது அ.தி.மு.க.வை தூற்றியும், அ.ம.மு.க.வை வாழ்த்தியும் பேசிய அவரது நாக்கு, இப்போது அப்படியே உல்டாவாகி பேச வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இப்பேர்ப்பட்ட  சூழலில் ஒரு தகதக அரசியல் பேட்டியை எடுத்துவிட்டிருக்கிறார் புகழ். அதில் தினகரனை வெச்சு வெளுத்திருக்கிறார் தாறுமாறாக. 
அதன் ஹைலைட் பாயிண்டுகள் இதோ....
*    நான் எப்போதுமே அ.தி.மு.க.வின் தொண்டன் எனும் உணர்வுடையவன். இடையில் சிலர் என்னை தவறாக வழிகாட்டியதால் சாக்கடைக்குள் சிக்கிக் கொண்டேன் என்பதையும் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் அதை உணர்ந்து இப்போது புனிதமான ஜீவநதியான அ.தி.மு.க.வில் இணைந்துவிட்டேன். 

*    ஆர்.கே.நகர் எலெக்‌ஷனில் தினகரனை வெற்றி பெற வைத்த ‘இருபது ரூபாய்’ஐடியாவை அவருக்கு கொடுத்ததே செந்தில்பாலாஜிதான். இந்த ஐடியாவை செயல்படுத்திட மாஜி எம்.எல்.ஏ. வெற்றிவேலும், மாஜி அமைச்சர் பழனியப்பனும் தினகரனுக்கு உடந்தையாக இருந்தார்கள். தினகரனை நம்பிய ஆர்.கே.நகர் மக்கள் ஏமாந்தனர்.
*    அதேபோல் அரவக்குறிச்சி இடைத் தேர்தலில் அத்தொகுதி மக்களை ‘இலவச நிலம் தருகிறேன்’ என்று சொல்லி செந்தில்பாலாஜி ஏமாற்றி, எம்.எல்.ஏ.வாகி இருக்கிறார். இது போன்ற மோசமான ஐடியாக்களை கொடுப்பதில் செந்தில் பாலாஜி பெரிய திறமைசாலி.

*    ஜெயலலிதா மரணப்படுக்கையில் இருந்த கடைசி மூன்று நாட்களில், கொஞம் கூட இரக்கமில்லாமல் ஆயிரத்து எழுநூறு கோடி ரூபாய் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளனர் சசிகலா குடும்பத்தினர். இது எவ்வளவு மோசமான செயல்! இனி சசிகலா விஷயத்தில் நான் தலையிட மாட்டேன். 
*    அடுத்த சட்டசபை தேர்தலின் மூலம் ஆட்சியை பிடிப்பேன் என்று சொல்கிறார் தினகரன், ஆனால் ஆளே இல்லாத கட்சியை வைத்துக் கொண்டு எங்கே ஆட்சியை பிடிக்க? அடுத்த சட்டசபை தேர்தல் வரையில் அவருடைய கட்சி இருக்குமா? என்பதை பார்ப்போம்.
*    எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் தொண்டர்கள் எடப்பாடியாரின் பின்னால் இருக்கிறார்கள். நானும் அவர்களில் ஒருவனாக நிற்கிறேன். எடப்பாடியாரின் நல திட்டங்களை மக்களிடம் பரப்புரை செய்வதே என் பணி. எனக்கு பணமோ, பதவியோ முக்கியமல்ல. ” என்று உருகி ஓடியிருக்கிறார் புகழேந்தி. 
ஓ! இது வேறயா?