2019ம் ஆண்டு ஏழை குடும்பங்களுக்கு ரூ 2,000 உதவித் தொகை திட்டத்தை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி. அடுத்து பொங்கல் பண்டிகைக்கும், தீபாவளிக்கும் ரூ 1000 ரூபாயை ஏழைகளுக்கு அறிவித்தார். இந்த முறை சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளதால் ஏதேனும் அறிவிப்பு வரலாம் எனக் காத்திருக்கிறார்கள் மக்கள். 

அந்த எதிர்பார்ப்பை எடப்பாடி பழனிசாமி நிறைவேற்ற முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. வரும் தீபாவளிக்கு ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.2 ஆயிரம் வழங்க உத்தேசித்துள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா தடுப்புப்பணியில் ஈடுபட்டுள்ள சுகாதாரப் பணியாளர்களுக்கு தலா ஐந்தாயிரம் ரூபாயும் வழங்க இருப்பதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது. தேர்தலுக்கு முன்பே மக்களுக்கான மேலும் பல நலத்திட்டங்களை செயல்படுத்த அதிமுக அரசு திட்டங்களை வகுத்துள்ளதாக கூறுகிறார்கள் தலைமை செயலக வட்டாரத்தினர். 

​இப்படிப் பணம் கொடுத்தால் அது தேர்தல் கமிஷனால் குற்றமாகப் பார்க்கப்படுமா என்கிற கேள்வி அரசு வட்டாரங்களில் எழுந்ததால் தாமதமானது. அப்படியெல்லாம் இல்லை. கொடுத்தால் ஒன்றும் தவறாகாது. அது தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணமாகாது என ஒரு சில உயரதிகாரிகள் அரசுக்கு அட்வைஸ் செய்துள்ளனர். எனவே வெகுவிரைவில் ஒவ்வொரு ரேசன் அட்டைக்கும் 2 ஆயிரம் ரூபாய் கொடுக்க எடப்பாடி அரசு முடிவுசெய்துள்ளது.