தமிழகத்தில் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகளில் நடைபெற்ற இடைத் தேர்தலில் அதிமுக அபார வெற்றி பெற்றது. திமுக கூட்டணி படு தோல்வியைச் சந்தித்தது.  அதிமுகவின் இந்த வெற்றி ஆளுங்கட்சியினரை குஷிப்படுத்தியுள்ளது.

மேலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் தனது சக அமைச்சர்களுடன் வெற்றியை கொண்டாடி வருகிறார். இதே மூடில் அமைச்சரவையை மாற்றி அமைக்கவும் இபிஎஸ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

முதலமைச்சரின் எண்ண ஓட்டத்தைஅறிந்து கொண்ட சீனியர் அதிமுக எம்எல்ஏக்கள் தற்போது அமைச்சர் பதவி கேட்டு தலைமைச் செயலகத்தை முட்டத் தொடங்கியுள்ளனர். முன்னாள் அமைச்சர்கள் செம்மலை, தோப்பு வெங்கடாசலம், சண்முகநாதன் மற்றும்  எம்எல்ஏ ராஜன் செல்லப்பா ஆகியோரில்  இருவருக்கு அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

அதே நேரத்தில் அமைச்சர் பதவியை இழந்த மணிகண்டன் தமிழக பாஜக தலைவர்கள் மூலம் மீண்டும் அமைச்சராக முடியுமா ? என முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.

எப்படி இருந்தாலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மிக விரைவில் அமைச்சரவையை மாற்றி அமைக்கவுள்ளார். செம்மலை, தோப்பு வெங்கடாசலம், சண்முகநாதன் மற்றும்  ராஜன் செல்லப்பா ஆகியோரில் யார் இருவருக்கு அதிர்ஷ்டம் அடிக்க உள்ளதோ !!  பொறுத்திருந்து பார்க்கலாம் !!