விஜய தசமி தினத்தன்று புதிய கட்சி பற்றிய அறிவிப்பை ரஜினி வெளியிடுவாரா? என அவரது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். வீடியோ பதிவு மூலம் ரஜினி வாய்ஸ் கொடுத்து இந்த அறிவிப்பு வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினியின் அரசியல் பிரவேசம் என்றாலே ஏகப்பட்ட சஸ்பென்ஸ் ஆகவே உள்ளது. கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு காலமாகவே ரஜினி அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்ற பேச்சு தான், திடீரென அரசியல் குறித்து ஏதாவது பேசி, எதிர்பார்ப்பை ஏகத்துக்கும் கிளப்பி பரபரப்பை ஏற்படுத்தி விட்டு, சிவனே என படப்பிடிப்புக்கு கிளம்பி அமைதியாகி விடுவதே ரஜினியின் வாடிக்கையாக இருந்தது.

ஒரு வழியாக இந்தாண்டு தொடக்கத்தில் அரசியல் குறித்த தனது மவுனத்தை கலைத்த ரஜினி தனிக் கட்சி தொடங்கப் போவதாகவும், சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவது உறுதி என்றும் அறிவித்தார். அப்போது முதல்வர் பதவிக்கு திறமையான ஒருவரை முன்னிறுத்தி ஆட்சியை வழிநடத்துவேன் என்பது உள்ளிட்ட பல்லேறு அதிரடி அறிவிப்புகளை ரஜினி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதனால் ரஜினி தனது கட்சிப் பெயர் குறித்த அறிவிப்பை பிரமாண்ட மாநாடு நடத்தி விரைவில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கட்சி தொடங்கப் போகிறேன் என்று ரஜினி அறிவித்த சில நாட்களில் கொரோனா தொற்று நாடு முழுவதும் பரவ ஆரம்பித்து, 8 மாதமாக ஊரடங்கு நீடிக்கிறது. இதனால் ரஜினி கட்சி அறிவிப்பு வெளியிடுவது தாமதமாகிப் போனது. இடையில் இனி ரஜினி எப்போது கட்சி ஆரம்பித்து கொள்கைகளை கூறி பிரச்சாரம் செய்து மக்களிடம் கொண்டு சேர்க்கப் போகிறாரோ? அதற்குள் தேர்தலே முடிந்துவிடும். எனவே, ரஜினி இந்த ஜென்மத்தில் கட்சி தொடங்கப்போவதில்லை என்றெல்லாம் கூட பேச்சு எழுந்தது.

 ஆனால், இந்த கொரோனா காலத்தில் படப்பிடிப்பு இன்றி ரஜினி வீட்டில் முடங்கினாலும் கட்சி தொடங்குவது தொடர்பான முக்கிய ஆலோசனைகளையும், ஏற்பாடுகளையும் கனகச்சிதமாக செய்து வந்ததாக கூறப்படுகிறது. அரசியல் ரீதியாக ரஜினி வாய்சில் 50-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அரசியல் கட்சி பற்றிய அறிவிப்பும் வீடியோ மூலமே ரஜினி வாய்சில் தயார் நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 இதனால் வரும் 26-ந்தேதி விஜயதசமி நாளில் கட்சி பற்றிய அறிவிப்பை ரஜினி வெளியிடலாம் என்ற பரபரப்பு தகவலும் கசிந்து வருகிறது. இதனால் ரஜினி ரசிகர்கள் மட்டுமின்றி தமிழக அரசியல் களமே பெரும் எதிர்பார்ப்பில் உள்ள நிலையில், ரஜினி கட்சி பற்றிய அறிவிப்பு விஜயதசமி நாளில் வெளியாகுமா? என்கிற எதிர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.