two leaves symbol case ... charge sheet file against ttv dinakaran
இரட்டை இலை சின்னத்தைப் பெற தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் டி.டி.வி.தினகரன் மீது டெல்லி போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாக உடைந்தது. சசிகலா தலைமையில் ஓர் அணியும், ஓபிஎஸ் தலைமையில் ஓர் அணியும் செயல்படத் தொடங்கியது. சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டதால் டி.டி.வி.தினகரன் தலைமையில் அந்த அணி இயங்கத் தொடங்கியது. சசிகலா தலைமையிலான அணி எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்கியது.
இந்நிலையில் ஜெயலலிதாவின் ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதிமுக கட்சியும், இரட்டை இலை சின்னமும் தங்களுக்கு உரியது என ஓபிஎஸ் அணி தரப்பில் தேர்தல் ஆணையத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது.

இதையடுத்து இரட்டை இலை சின்னத்தைப் பெற தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தினகரன் மீது டில்லி குற்றவியல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இது தொடர்பாக டி.டி.வி.தினகரன் மற்றும் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் தினகரன் மட்டும் ஜாமீன் பெற்று வெளியே வந்துள்ளார்.

கடந்த ஜூலை மாதம் டில்லி மாவட்ட நீதிமன்றத்தில் குற்றப்பிரிவு போலீசார் முதல் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தனர். இதில் சுகேஷ் சந்திரசேகரின் பெயர் மட்டும் இடம்பெற்றிருந்தது. ஆனால் டி.டி.வி.தினகரன் பெயா இடம் பெறவில்லை.
இந்நிலையில் 2 வது குற்றப்பத்திரிக்கையை டில்லி போலீசார் தாக்கல் செய்துள்ளனர். அதில் தினகரன், மற்றும் அவரது நண்பர் மல்லிகார்ஜூனா, இடைத்தரகர்கள் புல்கித் குந்த்ரா, ஜெய் விக்ரம் ஆகியோரின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன.

தரகர் சுகேஷ் சந்திரசேகரும் டி.டி.வி.தினகரனும் போனில் பேசிக்கொண்டது தொடர்பான குரல் பதிவை டெஸ்ட் பண்ணியதில் இருவரின் குரலும் இருப்பது தெரியவந்தததையடுத்து தினகரன் மீது குற்றப்பத்திக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் தினகரம் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளநிலையில் இரட்டை இலைச்சின்ன வழக்கு மீண்டும் சூடு பிடித்துள்ளது.
