two leaves problem.... today enquiry in election commssion
அதிமுகவின் இரட்டை இலைச் சின்னம் யாருக்கு என்பது குறித்து தேர்தல் ஆணையம் இன்று இறுதி விசாரணை நடத்துகிறது. இப்பிரச்சனை குறித்து இன்று முடிவு எடுக்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மரணம் அடைந்ததை தொடர்ந்து அ.தி.மு.க. இரண்டாக உடைந்தது. இதனால் அ.தி.மு.க. என்ற கட்சியின் பெயரை பயன்படுத்த தடை விதித்த தேர்தல் கமிஷன், அக்கட்சியின் இரட்டை இலை சின்னத்தையும் முடக்கியது.
அ.தி.மு.க. பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட சசிகலா தலைமையில் அ.தி. மு.க. (அம்மா) என்ற பெயரில் ஓர் அணியும், ஓபிஎஸ் தலைமையில் அ.தி. மு.க. (புரட்சித்தலைவி அம்மா) என்ற பெயரில் மற்றொரு அணியும் செயல்பட்டு வந்தது.
பின்னர் சசிகலா சிறை சென்றதால் அ.தி.மு.க. (அம்மா) அணி எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டில் வந்தது. அதன்பிறகு இரு அணிகளும் ஒன்றாக இணைந்தன. இந்த இணைப்பை விரும்பாத அ.தி.மு.க. (அம்மா) அணியைச் சேர்ந்த துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்கள் அவரது தலைமையில் தனி அணியாக செயல்பட்டு வருகிறார்கள்.
இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரி எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் அடங்கிய அணியினரும், டி.டி.வி.தினகரன் அணியினரும் தேர்தல் கமிஷனில் தங்கள் தரப்பிலான ஆவணங்களை தாக்கல் செய்து உள்ளனர்.
இந்தநிலையில், இந்த பிரச்சினை தொடர்பான வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு, இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பதை வருகிற 31-ந் தேதிக்குள் முடிவு செய்து அறிவிக்க வேண்டும் என்று கடந்த மாதம் 15-ந் தேதி தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து, இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்பது தொடர்பான விசாரணை அக்டோபர் 6-ந் தேதி நடைபெறும் என்றும், அப்போது இரு தரப்பினரும் நேரில் ஆஜராகி தங்கள் தரப்பிலான கருத்துகளை தெரிவிக்கலாம் என்றும் தேர்தல் கமிஷன் அறிவித்தது. அத்துடன் செப்டம்பர் 29-ந் தேதிக்குள் இரு தரப்பினரும் தங்கள் தரப்புக்கு வலுசேர்க்கும் ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
அதன்படி இரு அணியினரும் டெல்லி சென்று தேர்தல் கமிஷன் அதிகாரிகளை சந்தித்து கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில், இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணை டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் கமிஷன் அலுவலகத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு நடக்கிறது. தலைமை தேர்தல் கமிஷனர் ஏ.கே.ஜோதி மற்றும் இரு தேர்தல் கமிஷனர்கள் அடங்கிய முழு அமர்வு முன்னிலையில் நடைபெறும்.
இந்த விசாரணையில் இரு அணிகள் சார்பிலும் நிர்வாகிகள் மற்றும் வக்கீல்கள் கலந்து கொண்டு தங்கள் தரப்பிலான வாதத்தை முன்னெடுத்து வைக்கிறார்கள். இது தொடர்பான முடிவை தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்குமா என எதிர்பார்க்கப்படுகிறது.
