Two Leaves Case Hearing adjourned for Nov 6 what is behind such scene

பல இழுபறிகளைக் கடந்து, ஒத்திவைப்புகளை சந்தித்து, இரட்டை இலை தொடர்பான வழக்கு விசாரணை தேர்தல் ஆணையத்தில் இன்று நடைபெற்றது. ஆனால் டிடிவி தினகரன் தரப்பு கோரிக்கையை ஏற்று வரும் நவ.6ம் தேதிக்கு மீண்டும் ஒத்தி வைப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. 

இந்நிலையில், இவ்வாறு ஒத்தி வைக்கப்படுவதற்கு நாங்கள் காரணமில்லை என்று, டிடிவி தரப்பு ஆதரவாளர் புகழேந்தி செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். மேலும், வரும் நவ.6 திங்கள் கிழமையும் இந்த வழக்கு விசாரணை முடிவடைய வாய்ப்பில்லை என்றும் பொடிவைத்துப் பேசுகிறார். 

இதனிடையே, ஓபிஎஸ்., எடப்பாடி பழனிசாமி தரப்புக்காக ஆஜராகும் வழக்கறிஞர் முகுல் ரோத்தஹி, தில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், இந்த வழக்கு விசாரணையை காலம் தாழ்த்தவே டிடிவி தினகரன் தரப்பு முயற்சி செய்வதாகக் கூறினார். மேலும், விசாரணையை விரைந்து முடிக்க டிடிவி தரப்பு விரும்பவில்லை என்று கூறிய ரோத்தஹி, அனேகமாக திங்கள்கிழமைகூட இந்த விசாரணை முடியுமா என்று தெரியவில்லை, இருப்பினும், திங்கள் அல்லது செவ்வாயன்று இந்த விசாரணை முடியும் என்று நான் நம்புகிறேன் என்று கூறினார். 

இந்நிலையில், இந்த வழக்கு தேர்தல் ஆணையத்தால் மேலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறித்து கருத்து தெரிவித்தார் அமைச்சர் ஜெயக்குமார். வேண்டுமென்றே இந்த வழக்கின் விசாரணையின் போது, காலம் தாழ்த்துகின்றனர். விசாரணையை விரைந்து முடிக்க விடாமல் இழுத்துக் கொண்டே செல்ல வைக்கின்றனர். இந்த வழக்கில் விசாரணையை முடிக்க டிடிவி தரப்பு விரும்பவில்லை. வரும் 6ம் தேதியாவது விசாரணை முடியுமா என்று தெரியவில்லை என விரக்தியுடன் கூறுகிறார் அமைச்சர் ஜெயக்குமார்.

ஏற்கெனவே கடந்த விசாரணையின் போதும், டிடிவி தினகரன் தரப்புதான் அக்.30ஆம் தேதியன்று ஒரு தள்ளிவைப்புக் கோரிக்கையை அளித்தது. அதன்பின், அக்.31 மதியம் 3 மணிக்கு வைத்துக் கொள்ளலாமா என்று தேர்தல் ஆணையம் கேட்டபோது, அந்த நேரத்தில் தங்கள் தரப்பு இருக்க வாய்ப்பில்லை என்று கூறி, மறுநாளுக்கு கேட்டது. அதை அடுத்தே நவ.1ம் தேதி மதியம் 3 மணிக்கு விசாரணை வைத்துக் கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் கூறியது. 

இப்போது நவ.6ம் தேதிக்கு மீண்டுமொரு ஒத்திவைப்பு. உண்மையில் இந்த வழக்கில் விரைந்து முடிவு காணப்பட வேண்டும் என்பதை விரும்புகிறார்களா அல்லது வழக்கு வாய்தாக்களின் மூலம் மேலும் மேலும் இழுத்துக் கொண்டே நிலையற்ற தன்மையை நீட்டிக்க விரும்புகிறார்களா என்பது போகப் போகத் தெரியும்!