இரட்டை இலைச் சின்னம் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பிற்கு வழங்கப்பட்டதை எதிர்த்து டிடிவி தினகரன் தரப்பில் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை டெல்லி உயர்நீதிமன்றம் இன்று வழங்க உள்ளது. 

முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அதிமுக இரண்டாக உடைந்தது. இரண்டாக உடைந்த அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பு ஒன்று சேர்ந்தது. சசிகலா - டிடிவி தினகரன் தரப்பு மொத்தமாக கழட்டிவிடப்பட்டது. இதையடுத்து சசிகலா - தினகரன் தரப்பும், ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமி தரப்பும் இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கொண்டாடியது. இதனால் தேர்தல் ஆணையம் அதிரடியாக இரட்டை இலை சின்னத்தை முடக்கியது.

 

இதனால் தற்காலிகமாக தினகரன் தரப்புக்கு தொப்பி சின்னம் கிடைத்தது. ஓ.பி.எஸ். இபிஎஸ் தரப்புக்கு மின் கம்பம் சின்னம் ஒதுக்கப்பட்டது. இதன் மீதான விசாரணை நடைபெற்று வந்தது. பின்னர் தீர்ப்பில் இரட்டை இலை சின்னம் அதிமுகவின் ஓ.பி.எஸ். இபிஎஸ் தரப்புக்குதான் சொந்தம் என்று தேர்தல் ஆணையம் தீர்ப்பு வழங்கியது.  

இந்த தீர்ப்பை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றம் டிடிவி தினகரன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது சசிகலா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில்சிபல், கட்சியில் பொதுச்செயலாளர் பதவியையே ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணி நீக்கிவிட்டதாகவும், அதற்கு அவர்களுக்கு அதிகாரம் இல்லை என்றும் வாதிட்டார். அரசியல் மாற்றத்தின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் ஒருதலைப் பட்சமாக முடிவெடுத்ததாகவும் தினகரன் தரப்பில் வாதிடப்பட்டது. 

எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, தேர்தல் ஆணையம் முறையாக, அனைத்து தரப்புக்கும் தங்கள் வாதங்களை முன்வைக்க வாய்ப்பு வழங்கி, அதன் பின்னரே இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கியது வாதிட்டார். இந்த வழக்கில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் கடந்த 8-ம் தேதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். 

இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று பிற்பகலில் டெல்லி உயர்நீதிமன்றம் அறிவிக்க உள்ளது. மீண்டும் இரட்டை முடக்கப்படுமா என்ற அச்சத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் உள்ளனர்.