இந்த தேர்தலில் இரட்டை இலை மட்டும் அல்ல குக்கர் சின்னமும் இல்லை என்பதால் அமமுக நிர்வாகிகள் அனைவரும் ஒவ்வொருவராக சைலன்ட் மோடுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள்.

இரட்டை இலை நமக்குத்தான் என்று சொல்லி நிர்வாகிகளை ஓடி விடாமல் வளைத்து பிடித்து வைத்திருந்தார் தினகரன். ஆனால் இந்த தினகரன் பிளானுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சரியான சம்மட்டி அடியாகிவிட்டது. முன்னதாக குக்கர் சின்னத்தையும் தர முடியாது என்று தேர்த ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. இதனால் இதுநாள் வரை பிடித்து வைத்திருந்த நிர்வாகிகளை தற்போது எப்படி தக்க வைப்பது என்று தினகரன் தவிக்க ஆரம்பித்துள்ளார். 

இரட்டை இலை சின்னம் கிடையாது என்று தீர்ப்பு வரும் போது தினகரன் புதுச்சேரியில் இருந்துள்ளார். தீர்ப்பு வந்து சுமார் இரண்டு மணி நேரம் கழித்து தான் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போதும் கூட வழக்கம் போல் வீர வசனம் தினகரன் பேசவில்லை. உச்சநீதிமன்றம் சென்று குக்கர் சின்னத்தை வாங்குவோம் என்று கூறினார். ஆனால் அதற்குள் தேர்தல் முடிந்துவிடும் என்று நிர்வாகிகளுக்கு தெரியும். 

இதனிடைய புதுச்சேரியை தொடர்ந்து அருகாமை பகுதியில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளுக்கு தினகரன் ஏற்பாடு செய்தார். ஆனால் தீர்ப்பு வெளியான பிறகு தினகரன் கட்சி நிர்வாகிகள் ஒவ்வொருவர் செல்போனாக ஸ்விட்ச் ஆப் ஆக ஆரம்பித்தது. மேலும் பலர் சைலன்ட் மோடில் செல்போனை போட்டுவிட்டு சிட்டாக பறந்துவிட்டனர். இதனால் வழக்கமாக ஒரு கூட்டத்தோடு வலம் வரும் தினகரன் புதுச்சேரியில் இருந்து வெளியேறும் போது ஆட்கள் குறைவாகவே இருந்தனர். 

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சசிகலாவும் தினகரனை சந்திக்கவில்லை. வருமான வரி சோதனைக்கு பிறகு பணத்தை இறக்குவதிலும் பிரச்சனை உள்ளது. இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவால் இரட்டை இலையோடு குக்கர் சின்னமும் பறிபோய்விட்டது. இதனால் தினகரன் கட்சியில் இருந்து என்ன பலன் என்று அதிமுகவினர் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் இப்போதே வந்துவிட்டால் தேர்தலில் நாலு காசு பார்க்கலாம் என்று அதிமுக நிர்வாகிகள் அமமுக நிர்வாகிகளுக்கு வலை விரிக்க ஆரம்பித்துள்ளனர். வலையில் மீன் குஞ்சுகளை போல தினகரன் ஆதரவு நிர்வாகிகள் விழ ஆரம்பித்துவிட்டதாகவும் தகவல்கள் வருகின்றன.