கர்நாடகாவில் கடந்த ஆண்டு மே மாதம் நடந்த சட்ட மன்றத் தேர்தலில் மதசார்பற்ற ஜனதா தளமும், காங்கிரஸ் கட்சியும் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி அமைத்து ஆட்சியமைத்துள்ளன. 104 இடங்களில் பாஜக வெற்றி பெற்றிருந்த போதிலும், போதிய பெரும்பான்மை இல்லாததால் பாஜகவால் ஆட்சியமைக்க இயலவில்லை. அதேபோல 80 இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றிருந்த போதும், 37 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

கடந்த மாதத்தில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டபோது அமைச்சர் பதவி கிடைக்காத சில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அவர்களது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் உட்பட 20 பேர் காங்கிரஸ் கட்சியின் மீது அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்பட்டது. 

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 8 எம்.எல்.ஏ.க்கள் பொங்கல் பண்டிகை முடிந்து பாஜகவில் இணையவுள்ளதாகவும், அவர்களில் 3 எம்.எல்.ஏ.க்களுடன் மும்பையில் உள்ள விடுதி ஒன்றில் பாஜகவினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும்,  முதல்வர் குமாரசாமி அரசுக்கான ஆதரவை  2 சுயேட்சை எம்.எல்.ஏக்கள் வாபஸ் பெற்றனர். குமாரசாமி செயல்பாடுகளில் திருப்தி இல்லை என இருவரும் குற்றச்சாட்டு வைத்து கடிதம் வெளியிட்டுள்ளனர்.