சென்னை அருகே உள்ள ஆவடியில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. விழாவில் அமைச்சர் பாண்டியராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவரது தொகுதி என்பதாலும் திருவள்ளூர் மாவட்டத்திற்கான அமைச்சர் என்கிற வகையிலும் அவரது வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. ஏனென்றால் ஆவடியில் எப்போது எல்லாம் அதிமுக பொதுக்கூட்டம் நடைபெறுகிறதோ? அப்போது எல்லாம் உட்கட்சி பூசல் வெளிப்படையாகும் வகையில் மோதல் நடைபெறும். ஆனால் இந்த முறை மோதல் பகிரங்கமாக வெடித்து அமைச்சர் பாண்டியராஜனையே அதிர வைத்துவிட்டது. ஆவடி தொகுதியின் எம்எல்ஏவாக இருந்தவர் அப்துல் ரஹீம். இவர் தொகுதிக்காரர். மேலும் அமைச்சராகவும் இருந்தவர். ஆனால் 2016 தேர்தலில் ரஹீமுக்கு வாய்ப்பு வழங்காமல் விருதுநகரை சேர்ந்த பாண்டியராஜனுக்கு ஆவடியில் சீட் கொடுத்தார் ஜெயலலிதா. தனது தொகுதி இல்லை என்றாலும் கூட பாண்டியராஜன் தனது நாடார் சமுதாய மக்களின் கணிசமான வாக்குகளை மொத்தமாக பெற்று ஆவடியில் வென்றார்.

அவருக்கு அமைச்சர் பதவியும் தேடி வந்தது. அப்போது முதல் அங்கு ஆரம்பித்தது பிரச்சனை. இதற்கு இடையே ஜெயலலிதாவும் இறந்துவிட, பாண்டியராஜனுக்கு தொகுதி அதிமுகவினர் நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தனர். அதிலும் அவர் ஓபிஎஸ் அணியில் இணைந்த பிறகு ஓபிஎஸ் ஆதரவாளர் என முத்திரை குத்தப்ப்டடார். இதற்கு பதிலடியாக ரஹீம் எடப்பாடி அணியில் இணைந்து அமைச்சருக்கு எதிராக காய் நகர்த்தி வந்தார். இந்த நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது அமைச்சர் அருகே யார் நிற்பது என்பதில் மோதல் ஏற்பட்டது. அப்போது அமைச்சர் பாண்டியராஜன் ஆதரவாளர்களை முன்னாள் அமைச்சர் ரஹீம் ஆதரவாளர்கள் தாக்கியுள்ளனர். இந்த நிலையில் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் அமைச்சர் ரஹீமின் ஆதரவாளர் பேசிக் கொண்டிருந்த போது சிலர் மேடையில் இருந்து கீழே இறங்கினர். இதனால் எரிச்சல் அடைந்த அவர், நேராக அமைச்சரிடம் சென்று வாக்குவாதம் செய்தார். எங்கு இருந்து வந்து எங்கு அரசியல் செய்கிறாய் என்று அமைச்சரவை அவர் ஒருமையில் பேச அங்கிருந்தவர்கள் ஆடிப்போய்விட்டனர். மேலும் எங்கு எங்கோ இருந்து வந்து இங்கு நாட்டாமை செய்கிறான் என்று பெயர் கூறாமல் பாண்டியராஜனை விமர்சிக்க அவரது ஆதரவாளர்கள் டென்சன் ஆகினர்.

அப்போது எம்எல்ஏ அலெக்சாண்டர் வந்து ரஹீம் ஆதரவாளரை சமாதானப்படுத்தினார். ஆனால் அதற்கு எல்லாம் அசைந்து கொடுக்காத அந்த நபர், நாங்க எடப்பாடி ஆதரவாளர், நீங்கள் ஓபிஎஸ் ஆதரவாளர், யார் என்பதை பார்த்துவிடலாம் என சவால் விட அமைச்சர் முகம் இருண்டுவிட்டது. ஆனால் பிறகு சமாளித்துக் கொண்டு நிகழ்ச்சியில் பேசிய பாண்டியராஜன், அச்சம் என்பது மடமையடா என்று எம்ஜிஆர் பாடலை பாடி தான் யாருக்கும் பயப்படப்போவதில்லை என்பதை கூட மறைமுகமாக கூறிவிட்டு சென்றார். தொகுதியில் தனக்கு நேர்ந்த அவமானம் குறித்து பல முறை பாண்டியராஜன் கட்சி மேலிடத்தில் புகாராக கூறி வருகிறார். ஆனால் ஓபிஎஸ் ஆதரவாளர் என்று முத்திரை குத்தப்பட்டுள்ளதால் பாண்டியராஜனுக்கு எதிராக அரசியல் செய்யும் ரஹீம் உள்ளிட்ட யாரையும் கட்சி மேலிடம் கண்டுகொள்வதில்லை என்கிறார்கள்.