தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை ஆணையத்தில் ஆஜராகும்படி  நடிகர் ரஜினிகாந்த்க்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் போலீஸாரின் துப்பாக்கிச்சூட்டில் பலியானார்கள். ஏராளமானோர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம்  தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தவர்களைச் சந்திக்க தூத்துக்குடிக்கு வந்து, நடிகர் ரஜினி உடல்நலம் விசாரித்தார். இந்தச் சந்திப்புக்கு பிறகு சென்னைத் திரும்பிய ரஜினி, செய்தியாளர்களைச் சந்தித்தார். 
“பேரணியில் சமூக விரோதிகள் நுழைந்ததால்தான் வன்முறை ஏற்பட்டது. அதனால்தான் காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது’ என்று காட்டமாக ரஜினி தெரிவித்தார். இந்நிலையில் தூத்துக்குடி துப்பக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் தமிழக அரசு விசாரணை ஆணையத்தை அமைத்தது. அந்த விசாரணை ஆணையம் பல தரப்பினருக்கு சம்மன் அனுப்பி விசாரித்துவருகிறது. 
இதற்கிடையே ‘பேரணியில் சமூக விரோதிகள் நுழைந்தனர்’ என்று ரஜினிகாந்த் பேசியதைக் குறிப்பிட்டு அவரை விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை விசாரணை ஆணையத்திடம் வைக்கப்பட்டிருந்தது. இந்தக் கோரிக்கையை ஏற்றுள்ள விசாரணை ஆணையம்,  தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக 25-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவேண்டும் என்று ரஜினிகாந்துக்கு சம்மன் அனுப்பியுள்ளது.