மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் தோல்வியை சந்தித்தாலும், அடுத்து வரவிருக்கும் தேர்தலில் அமமுக நிச்சயம் வெற்றி பெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் தொண்டர்கள் மத்தியில் பேசியுள்ளார்.  

மக்களவை தேர்தல் தோல்விக்கு பிறகு அமமுக நிர்வாகிகள் ஆங்காங்கே தமிழகம் முழுவதும் கூண்டோடு அதிமுக மற்றும் திமுகவில் சேர்ந்து வரும் நிலையில், நேற்று திருச்சி வடக்கு, தெற்கு, திருச்சி மாநகர் என மூன்று மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் டிடிவி.தினகரன் தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர் பேசுகையில், மக்களவைத் தேர்தல் களத்தில் அமமுகவின் 90 சதவீத நிர்வாகிகள் உணவு, உறக்கமின்றி கடுமையாக உழைத்துள்ளனர். மேலும், நான் வீட்டில் இருந்த நாட்களை விட தொண்டர்களுடன் இருந்த நாட்கள் தான் அதிகம். இரண்டு வருஷம் வேனில் தான் அதிகமாக இருந்துள்ளேன். அனைத்து மக்களுடன் மக்களாக பேசிக்கொண்டிருக்கின்றேன். இருப்பினும் தோல்வியை தழுவியுள்ளோம்.

 

1500 வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கு பூஜ்ஜியம் வாக்குகள் பதிவாகியுள்ளது. பல வாக்குச்சாவடிகளில் ஒற்றை, இரட்டை இலக்கத்திலேயே வாக்குப்பதிவாகியுள்ளது. பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர் போன்றோர் கட்சி ஆரம்பிக்கும் போது பலர் வெளியேறி உள்ளார்கள். அதுபோல சில சுயநல நிர்வாகிகள் எப்போது வேண்டுமானாலும் விலகுவர். புரட்சித்தலைவருக்கும், அம்மா அவர்களுக்குமே துரோகம் இழைத்தவர்கள் உண்டு. இயக்கத்திலிருந்து மேல்மட்ட தலைவர்கள் சுயநலத்தில் மாறலாம். அடிமட்ட தொண்டர்கள் ஒருநாளும் மாறமாட்டார்கள். சிலர் குழப்பி குழப்பி பேசுகிறார்கள். அவர்கள் குழம்பிப்போய் மற்றவர்களையும் குழப்புகிறார்கள்.

மிகப் பெரிய தலைவரான எம்.ஜி.ஆர். 1972-இல் கட்சி தொடங்கினாலும் 1977-இல்தான் ஆட்சியைப் பிடித்தார். அமமுக தொடங்கி ஓராண்டுதான் ஆகிறது. எனவே, யார் எங்கு சென்றாலும் அதை பெரிதாக எண்ண வேண்டாம். அமமுக வருங்காலத்தில் மாபெரும் வெற்றி பெறும். துரோகிகள் கையில் சிக்கியுள்ள இரட்டை இலை சின்னம், அதிமுக-வை நிச்சயம் மீட்டெடுப்போம். அதற்கான ஜனநாயக ஆயுதம்தான் அமமுக. தமிழக மக்களின் நலனுக்காகவும், தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும் அமமுக தொடர்ந்து உழைத்திடும் என்றார்.