மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வியை அடுத்து வரும் 28-ம் தேதி பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவை டிடிவி.தினகரன் சந்திக்க உள்ளார். 

நாடு முழுவதும் தேர்தல் முடிவு 23-ம் தேதி வெளியானது. தமிழகத்தை பொறுத்தவரை 38 நாடாளுமன்ற மற்றும் 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவும் வெளியிடப்பட்டது. இதில் திமுக 38 நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதிமுக 1 இடத்தில் மட்டுமே வெற்றிபெற்று மாபெரும் தோல்வியை சந்தித்தது. இதேபோல், அதிமுகவில் இருந்து பிரிந்து வந்த அமமுக மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் கணிசமான வாக்குகளை பெரும் என கணிக்கப்பட்டது.  

ஆனால், போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் அமமுக தோல்வியையே சந்தித்தது. தகுதி நீக்க எம்.எல்.ஏக்களும் தங்களின் தொகுதிகளில் தோல்வியை சந்தித்தனர். பல இடங்களில் 4-வது இடத்திற்கு அமமுக தள்ளப்பட்டது. இது டிடிவி.தினகரனுக்கும் அவரை நம்பி வந்தவர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால், அதிமுகவின் மேல் மக்களுக்கு உள்ள அதிருப்தியை பயன்படுத்தி பிரச்சாரத்தை மேற்கொண்டு வந்த தினகரன் இடைத்தேர்தலில் வெற்றிபெற்று விடுவோம் என்ற கணிப்பு பொய்த்து போனது. 

இந்நிலையில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் அடையாறில் உள்ள வீட்டில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல்களில் வெற்றியை எதிர்பார்த்தோம், ஆனால் கிடைக்கவில்லை. மக்களின் தீர்ப்பை ஏற்கிறோம். தமிழகத்தில் சுமார் 300 வாக்குச்சாவடிகளில் அ.ம.மு.க.விற்கு பூஜ்ஜிய வாக்குகளே பதிவாகி உள்ளன. இதற்கு தேர்தல் ஆணையம் தான் பதில்கூற வேண்டும் என்றார். வரும் 28ம் தேதி பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவை சந்திக்க உள்ளதாக கூறினார். அப்போது தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வி குறித்து விளக்கம் அளிப்பார். 

ஏற்கனவே, தேர்தலுக்கு முன்பாக சட்டமன்ற இடைத்தேர்தலில் 10 முதல் 15 இடங்களில் வெற்றிபெருவோம் என்று சசிகலாவிடம் தினகரன் உறுதியளித்திருந்தார். ஆனால், ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாத நிலையில் சசிகலாவை தினகரன் சந்திக்க உள்ளது கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.