அமமுகவில் அடுத்தடுத்து முக்கிய நிர்வாகிகள் வெளியேறி மாற்றுக்கட்சியில் இணைந்து வருகின்றனர். இந்நிலையில், கட்சியில் உள்ள அதிருப்தியாளர்கள் வெளியேறாமல் இருப்பதற்கு அவர்களுக்கு புதிய பதவிகளை வழங்கி சரிகட்ட தினகரன் திட்டமிட்டுள்ளார். 

மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அமமுக படுதோல்வியை சந்தித்தது. இதனால், அதிருப்தி அடைந்த பல்வேறு நிர்வாகிகள் தலைமை மேல் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து அதிமுக மற்றும் திமுகவில் இணைந்து வருகின்றனர். இது தொடர்பாக செய்தியாளர்கள் தினகரனிடம் கேட்ட போது யார் வேண்டுமானாலும் கட்சியை விட்டு செல்லலாம் என்று கூறினார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தங்க தமிழ்செல்வன் அமமுகவில் இருந்து வெளியேறி திமுகவில் இணைந்தார். இதேபோல், இசக்கி  சுப்பையாவும் கட்சியில் இருந்து வெளியேறி அதிமுகவில் இணைந்தார்.

 

இந்நிலையில், கடந்த 3-ம் தேதி பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவை டிடிவி.தினகரன் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, ஏன் முக்கிய உறுப்பினர்கள் கட்சியில் இருந்து செல்கிறார்கள்? கொஞ்சம் நிதானமாக செயல்படுங்கள். இனி கட்சியை விட்டு யாரும் செல்லாதபடி பார்த்துக்கொள்ளுங்கள் என அறிவுரை வழங்கியுள்ளார். 

எனவே, சசிகலாவின் அறிவுரையை ஏற்று கட்சியில் உள்ள அதிருப்தியாளர்களை மாற்று கட்சிக்கு செல்லாமல் அதிரடி வியூகம் வகுத்துள்ளார். அவர்களுக்கு முக்கிய பதவிகளை வழங்கி சரிகட்டவும் திட்டமிட்டுள்ள்ளார். ஏற்கனவே, தங்க தமிழ்செல்வன் கட்சியை விட்டு வெளியேறும் போது முன்னாள் அமைச்சர் பழனியப்பனும் கட்சியை விட்டு வெளியேற உள்ளதாக கூறப்பட்டது. இதேபோல், சி.ஆர்.சரஸ்வதியும் கட்சியின் நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டாமல் இருந்தார். 

எனவே, கட்சியில் பழனியப்பனுக்கு துணைப்பொதுசெயலாளர் பதவியும், சி.ஆர்.சரஸ்வதிக்கு கொள்கை பரப்பு செயலாளர் பதவியையும் தினகரன் கொடுத்துள்ளார். இதேபோல், அதிருப்தியில் உள்ள பலருக்கும் முக்கிய பொறுப்புகளை வழங்க தினகரன் திட்டமிட்டுள்ளார். அதன்படி, அதிருப்தியில் உள்ள முக்கிய நபர்கள் மேலும் 3 பேருக்கு கட்சியின் துணைப்பொதுசெயலாளர் பதவியை வழங்க தினகரன் திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல், செய்திதொடர்பாளர் புகழேந்தி க்கும் முக்கிய பொறுப்பை வழங்க டிடிவி,தினகரன் திட்டமிட்டுள்ளார்.